ஜாகர்த்தா, டிச.10-
இந்தோனேசிய தலைநகரான ஜாகர்த்தாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் பேரணியாக வந்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதர வாகவும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவெடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எதிராகவும் கண்டனம் முழங்கினர். அமெரிக்க தூதரகம் முன் திரண்டிருந்த போராட்டக்காரர்கள், அமெரிக்க தூதரகமே அல் காட்சிலிருந்து வெளியேறு, ஜெருசலேத்தையும் பாலஸ்தீனர்களையும் சுதந்திரமாக இருக்கவிடு, நாங்கள் பாலஸ்தீனர்க ளோடு இருக்கிறோம் என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அல் காட்ஸ் என்பது அரபு மொழியில் ஜெருசலேம் என்பதை குறிப்பதாகும். ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தை இஸ்லாமிஸ்ட் பிராஸ்பெரஸ் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இது டிரம்ப் வியாழனன்று அறிவித்ததைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போராட்டம் ஆகும்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ ஜோவாய் விடோடோ, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவுக்கு கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளதோடு, இது ஐ.நா.தீர்மானங்களை மீறும் வகையிலானது என்றும் கூறியுள்ளார். இந்தோனேசியா, உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடாகும். இந்தோனேசியர்கள் நீண்டகாலமாகவே பாலஸ்தீனர்களுக்கு உறுதியான ஆதரவாளர்களாக இருப்பவர்கள். அவர்கள் யூத அரசுடன் எந்தவிதமான அரசு முறை உறவுகளையும் கொண்டிருக்க வில்லை. டிரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஐ.நா.வும் டிரம்பின் முடிவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: