தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்ற கோரிக்கைக்கு, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதை இலட்சியமாகவே கொண்ட இன்றைய மத்திய பாஜக அரசும் மதிப்பளிக்கவில்லை, தனியார்மயமாக்கலை முடுக்கிவிட்ட முந்தைய காங்கிரஸ் அரசும் செவிமடுத்ததில்லை. வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதிகள், பழங்குடிகள் ஆகியோருக்குரிய இடங்களை உறுதிப்படுத்துவதில் முன்னு தாரணமாகத் திகழ வேண்டிய அரசாங்கம், அந்தக் கடமையை நிறைவேற்றுவதிலிருந்து வெகுதொலைவு விலகிவிட்டது. தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சமூகச் செயல்பாட்டாளர்கள் சிலர் பெற்ற விவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993 செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. சட்டம் வந்த சில ஆண்டுகளிலேயே முழுமையாகச் செயல்படுத்திவிட முடியாதுதான். ஆனால் கால் நூற்றாண்டைத் தொடுவதற்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் மத்திய அரசு அமைச்சகங்களின் கீழுள்ள துறைகளில் எந்த அளவுக்கு இது நிறைவேற்றப்பட்டுள்ளது? 2017 ஜனவரி 1 நிலவரப்படி, 24 அமைச்சகங்களின் ஏ பிரிவு பணிகளில் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தோர் 17 விழுக்காடுதான். பி, சி, டி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பணிகளில் முறையே 14, 11, 10 விழுக்காடுகள்தான். 57 துறைகள் மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசமைப்பு சாசனப்பூர்வ அமைப்புகளில் இது முறையே 14, 15, 17, 18 விழுக்காடுகள்தான். 64 அமைச்சரவைச் செயலக அதிகாரிகளில் ஒருவர் கூட ஓபிசி சமூகங்களிலிருந்து வந்தவரல்ல.

இதுவும் முழுமையான நிலவரமல்ல. 2003ல் மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி அனைத்துத் துறைகளும் தங்களது பணியாளர்களின் சமூகநிலை அறிக்கைகளை ஆண்டுதோறும் அனுப்பியாக வேண்டும். ஆனால் ரயில்வே, பாதுகாப்பு, நிதி, உள்துறை உள்ளிட்ட 11 அமைச்சகங்கள், இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சிறப்பு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தேவைப்பட் டால் நியமனத்திற்கான விதிகளைத் தளர்த்துதல் என்ற பரிந்துரைகளும் பின்பற்றப்பட வில்லை. எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தோருக்கான இடங்களின் நிலைமையும் இதுதான். இது பற்றிப் பிரச்சனை கிளப்பப்பட்டபோது, காலவரையறைக்கு உட்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இன்றைய மத்திய அரசு கூறியது. அது காற்றோடு போய்விட்டது என்பதையே இது காட்டுகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல் படுத்த முடிவு செய்ததால்தான் 1990ல் வி.பி. சிங் தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது என்பதை நினைவுகூர்ந்தால், தற்போதைய அலட்சியம் வியப்பளிக்காது. இட ஒதுக்கீடு கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுகிற பின்னணியில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான அரசியல் உறுதியை வலியுறுத்தும் போராட்டக் குரல்கள் பல மடங்கு வலுவாக ஒலித்தாக வேண்டியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: