இப்போதைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?                                                                                                         2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி, பாஜக தன்னு டைய செல்வாக்கை விரிவுபடுத்திக்கொண்டே வந்திருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாகப் பெரிய ஆதிக்கக் கட்சியாக வளர்ந்திருக்கிறது. இதுதான் புதிய யதார்த்தம். ஆனால், ஆறு மாதங்களாக இந்த அரசுக்கு எதிராக வெவ்வேறு பிரிவு மக்களிடையே அதிருப்தியும் போராட்ட உணர்வுகளும் தோன்றியுள்ளன. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பரவலாக நடந்துள்ள விவசாயிகளின் கிளர்ச்சிகள் இதற்கு உதாரணங்கள்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசைக் கண்டித்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியின் நாடாளுமன்ற வீதியில் ஊர்வலம் சென்றனர். ஊடகங்கள் இந்தச் செய்தியைப் புறக்கணித்தன. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராடுகிறார்கள், பட்டியல் இனத்தவர்களும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுகின்றனர்.

நாம் இப்போது திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். பாஜகவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தபோதே எதிர்ப்புக்கும், போராட்டத்துக்குமான விதைகளும் விதைக்கப்பட்டன. இதுவே நிலைமை மாறுவதற்கான தொடக்கமாகும். இப்போதைய தேவை, பாஜகவுக்கு நம்பகமான மாற்று ஒன்றை, கொள்கை – சித்தாந்தரீதியாக முன்வைக்க வேண்டும். இது பாஜகவை எதிர்க்கும் அனைத்து சக்திகளையும் ஒரே அணியில் கொண்டுவரும்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மதச்சார்பற்ற எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே அணிக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா – அதுவும் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட ‘மகா கட்பந்தன்’ முயற்சி தோல்வியுற்ற பிறகு?

அப்படி எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை; பீகாரின் மகா கட்பந்தனே இதற்கு நல்ல உதாரணம். தெளிவான திட்டம் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்வது சந்தர்ப்பவாதமாகவும் தற்காலிகமாகவும்தான் இருக்கும். அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் சமூக முரண்பாடுகளும் இருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் ஒரே அணியில் இடம்பெறுவதை எதிர்பார்க்க முடியுமா? ஒரே மாதிரியான கருத்துள்ள கட்சிகளிடையில், பொதுத்திட்டம் அடிப்படையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.

அத்தகைய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கலாமா?                                                                                                   ஏதாவது சில கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பது சாத்தியம்; அதில் எங்கள் கட்சியால் இடம்பெற முடியாது. வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் புதிய பொருளாதார சுதந்திரக் கொள்கைகளை எதிர்ப்பதும்.பொருளாதார சுதந்திரம், தாராளமயம் ஆகிய கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் காங்கிரஸுடன் எங்களால் கூட்டணி அமைக்க முடியாது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவதுதான் எங்கள் கட்சியால் சாத்தியம். வகுப்புவாதத்துக்கு எதிராகப் பெரிய அணிசேர்ப்பில் நாங்களும் ஒற்றுமையாகப் பாடுபட முடியும்.

பாஜகவை விரட்டுவோம் – தேசத்தைக் காப்பாற்றுவோம் என்ற அறைகூவலுடன் லாலு பிரசாத் தலைமையில் பாட்னாவில் ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் உங்கள் கட்சி ஏன் சேரவில்லை?                                                                                                                                                                                         தேசிய அளவில் மகா கட்பந்தனை ஏற்படுத்துவதற்காகத்தான் அந்தப் பொதுக்கூட்டம். எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. உதாரணத்துக்கு, மம்தா பானர்ஜி அந்தப் பொதுக்கூட்டத்தில் முக்கியமாக இருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய கட்சியாக இடம்பெறும் மேடையில் எங்களால் இடம் பெற முடியுமா? மேற்கு வங்கத்தில் ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ், அரசியலில் வகுப்புவாதத்தைப் புகுத்திவருகிறது.

நரேந்திர மோடி அரசு யதேச்சதிகாரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது, பாசிசத்தை அல்ல என்று கடந்த ஆண்டு பேசியிருந்தீர்கள். நிலைமை மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா?                                                                                                                                                                            நான் சொன்னது அது இல்லை. மோடி அரசு மேலும் மேலும் யதேச்சதிகாரமாகிவருகிறது என்ற அறிகுறிகள் தெரிகின்றன என்று எங்களுடைய கட்சியின் மாநாடு 2015 ஏப்ரலில் எச்சரித்தது. இந்த ஆட்சி ஏற்பட்டு மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் யதேச்சதிகார – வகுப்பு வாத ஆட்சியை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஆட்சியின் லகான் ஆர்எஸ்எஸ் கையில்தான் இருக்கிறது என்பதால், பாசிச பாணி தாக்குதல்கள் நடந்துவருகின்றன. இவை மேலும் அதிகரிக்கும். சர்வதேசப் பின்னணியில் பார்க்கும்போது, பல நாடுகளில் வலதுசாரிக் கட்சிகள்தான் வலுவான தலைவர்களின் கீழ் ஆள்கின்றன. இது பாசிசம் இல்லை என்றாலும், மற்றவர்களைக் குறிவைக்கும் யதேச்சதிகாரக் கூறுகள் கொண்டவை. அதிதீவிர தேசியவாதம் பேசுபவை.

2015-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம், பாஜகவை எதிர்ப்பதுதான் கட்சியின் முக்கியப் போராட்டம் என்று கூறியது. அந்த எதிர்ப்பில் வெற்றி பெற்றுவிட்டீர்களா?                                                                           மோடி அரசுக்கு எதிராகவும் அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டங்களும் குரல்களும் அதிகரித்துவருகின்றன. இவற்றை விரிவுபடுத்தி மேலும் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்வதுதான் எங்களுடைய முயற்சி. இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் மூலம்தான் பாஜகவைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்க முடியும்.இடதுசாரி அல்லாத எதிர்க்கட்சிகள் கருதுவதைப் போல, வெறும் தேர்தல் சார்ந்த உத்திகள் மட்டும் பாஜக வைத் தோற்கடிக்கப் போதாது. நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்களைத் திரட்டி நடத்தும் போராட்டங்களும் இயக்கங்களும்தான் முக்கியமானவை.

வங்கி ஊழியர் சங்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக இடதுசாரிகளால் ஏன் வலுவான எதிர்ப்பை உருவாக்க முடியவில்லை?                                                                  ஊழியர் சங்கத்துக்கும் பணமதிப்பு நீக்கத்துக்கும் இடையில் தொடர்பு ஏதும் இல்லை. பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் கொள்கை முடிவு. அதை வங்கிகள் அமல்படுத்தியாக வேண்டும். வங்கி ஊழியர்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்றக் கடுமையாக உழைத்துள்ளனர்.அந்த நடவடிக்கைக்கான எதிர்ப்பு வெளியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். பணமதிப்பு நீக்கத்துக்கு எதிரான மக்களுடைய போராட்டம் எங்கெல்லாம் நடந்ததோ அங்கெல்லாம் இடதுசாரிகள் தலைமை தாங்கினார்கள். கேரளம் நல்ல உதாரணம். அங்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு இதற்கு முன்னிலை வகித்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் சராசரி வயது 60. பல்கலைக்கழகங்களில் இடதுசாரிகளுக்கு வலுவான ஆதரவு இருந்தும், பொதுத்தேர்தல்களில் இளைஞர்களின் ஆதரவை இடதுசாரிகள் பெறுவதில்லையே, ஏன்?                                                        தேர்தல்களில் இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பதில்லை என்பது உண்மையல்ல. அப்படி என்றால், கேரளத்திலும் திரிபுராவிலும் வெல்வது எப்படி? அதற்கும் முன்னர் மேற்கு வங்கத்திலேயே வென்றது எப்படி? பல பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், இது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கவில்லை. பல இடங்களில் இளைஞர்களைச் சென்று சேர வேண்டியிருக்கிறது.கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களைப் பொறுத்து, அந்த இடத்துக்கு வர அவர்கள் கட்சிக்குள் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் கட்சியில் பணியாற்ற வேண்டியிருக்கிறது. மாநில அளவில் கட்சி அமைப்புகளில் இளைஞர்கள் நிர்வாகிகளாக இருக்கின்றனர். கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 20ரூ பேர் 31 வயதுக்கும் குறைவானவர்களே.

மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கிறது, இதை மேம்படுத்தத் திட்டம் இருக்கிறதா?                                                                                                                பெண் உறுப்பினர்கள் போதவில்லை என்று சொல்லலாமே தவிர, மிகமிகக் குறைவு என்று கூறிவிட முடியாது. 2015-ல் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 15ரூ பேர் பெண்கள். 2018-ல் இதை 25ரூ அளவுக்கு உயர்த்த நம்பிக்கைக் கொண்டுள்ளோம். கட்சியின் எல்லா அமைப்புகளிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கேரளத்தில் முடிவில்லாத அரசியல் வன்முறைச் சூழல் நிலவுகிறது. ஆர்எஸ்எஸ்ஸும் இடதுசாரிகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்கின்றனர். இந்தச் சுழல் முடிவுக்குவரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?                                                                                                                                        ஆர்எஸ்எஸ் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வதைப் பொறுத்தது இது. ஆர்எஸ்எஸ் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி வன்முறையை, அதிலும் குறிப்பாக கண்ணூரில் ஒரு உத்தியாகக் கடைப்பிடித்துவருகிறது என்பது கேரளத்துக்கு வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சீர்குலைக்க இதுதான் வழி என்று அவர்கள் கருதுகின்றனர்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஆர்எஸ்எஸ் – மார்க்சிஸ்ட் மோதலைப் பெரிதுபடுத்திப் பேசுகின்றனர். சமீபத்தில்கூட திருவனந்தபுரம் மாநகர மேயர் பாஜக கவுன்சிலராலும் சில ஆர்எஸ்எஸ் தொண்டர்களாலும் தாக்கப்பட்டுக் காயம் அடைந்தார். வன்செயல்களை ஆதரிப்பதால் மார்க்சிஸ்ட் கட்சிக்கோ, இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கோ எந்த ஆதாயமும் இல்லை. இதனால்தான் மாநில முதலமைச்சர், இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்களை அழைத்துப் பேசினார்.

உலக அளவில் வியப்பிலாழ்த்திய சம்பவங்கள் பற்றி மார்க்சிய வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாமிடம் கேட்டபோது, மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணி அரசு தோற்கடிக்கப்பட்டதுதான் என்று கூறியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் புத்துயிர் பெற மார்க்சிஸ்ட் கட்சி என்ன செய்கிறது?                                                                                                                                                       மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணி அரசு தொடர்ந்து ஏழு சட்ட மன்றத் தேர்தல்களில் வென்றது. 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 2011-லும் 2016-லும் தோற்றது. இடதுசாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விஷமப் பிரச்சாரமும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கையாண்ட வன்முறை நடவடிக்கைகளும்தான் இதற்குக் காரணங்கள்.மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உழைத்துவருகிறோம், மக்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். நிலம் கையகப்படுத்தல் கொள்கையில் செய்த தவறுகள் உட்பட சிலவற்றைத் திருத்திக்கொள்கிறோம். மக்களுடைய நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று, இழந்த செல்வாக்கை மீட்பதுதான் எங்களுடைய முதல் கடமை. அதைச் செய்துகொண்டிருக்கிறோம். இது தேர்தலில் எதிரொலிக்கும்!

சுருக்கமாகத் தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.
நன்றி : தி இந்து தமிழ்

Leave A Reply

%d bloggers like this: