பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு செல்வதற்கு முன் அந்நாட்டு வரலாற்றை அறிந்து கொள்ள எடுவர்டோ காலியானோ எழுதிய “லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்” (பாரதி புத்தகாலயம் வெளியீடு) என்ற நூலை வாசித்தேன். சிலியில் ஜனநாயகப் பூர்வமாக வெற்றி பெற்ற சல்வடார் அலெண்டே தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை கவிழ்த்து, அமெரிக்க சிஐஏ ஆட்கள் அவரை கொலை செய்தனர். அப்போது சிலியிலிருந்து தப்பிச் சென்ற அவரது மனைவி எடுத்துச் சென்ற சொற்பமான உடமைகளில் ஒன்று “லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்” என்ற நூல். இந்த நூலைத் தான் 2009ம் ஆண்டு ஒபாமாவிற்கு வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பரிசாக அளித்தார். படிப்பவரை உலுக்கும் சக்தி கொண்டது இந்நூல். இங்கிலாந்தின் காலனியாக இந்தியா இருந்த 200 ஆண்டு காலத்தில் இங்கிலாந்தின் மூலதன சேர்க்கையில் (முதலாளித்துவ வளர்ச்சி) மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் அடித்த கொள்ளை என பல வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதைவிடவும் கொடூரமாக பல நூறு ஆண்டு காலம் போர்ச்சுகீஸ், ஸ்பெயின், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடித்தன. ஐரோப்பிய நாடுகளின் மூலதன சேர்க்கையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடித்த கொள்ளை முக்கியமான பகுதி. லத்தீன் அமெரிக்காவை ஆக்கிரமித்து சூறையாடியதில் வாளும், சிலுவையும் இணைந்தே செயல்பட்டன என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1500ம் ஆண்டிலிருந்து பல நூறு ஆண்டுகள் பிரேசில் காலனியாதிக்கத்தின் கீழ் உழன்று கொண்டிருந்தது. 1888லிருந்து அங்கு குடியரசு உருவானது. அதுவும் அரைகுறை குடியரசு தான். 1917ம் ஆண்டு ரஷ்ய நவம்பர் புரட்சியின் தாக்கத்தில் 1922ம் ஆண்டு பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ரஷ்ய அனுபவத்தின் அடிப்படையில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தீவிரமாக திரட்டும் பணியில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. 1930ம் ஆண்டு பிரேசில் விடுதலை முன்னணி என்ற முழக்கத்தை பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, 15 ஆயிரம் கம்யூனிஸ்ட்டுகள் சிறைபடுத்தப்பட்டனர். 1962ம் ஆண்டு ராணுவத் தளபதிகள் நிறுவிய சர்வாதிகார ஆட்சி 1985ம் ஆண்டு வரை நீடித்தது. அதுவரையிலான தனது 63 ஆண்டுகால வரலாற்றில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகள் மட்டுமே சட்டப்பூர்வமாக செயல்பட முடிந்தது.
1962ம் ஆண்டு பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டது.

திருத்தல்வாத பாதையில் சென்ற ஒரு பிரிவு கம்யூனிஸ்ட் கட்சி பலகீனமாகி தேய்ந்து விட்டது. சோவியத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகும் செங்கொடி, மார்க்சிய – லெனினிய தத்துவம், தொழிலாளி வர்க்க சர்வதேசியம் போன்ற மார்க்சிய – லெனினிய கோட்பாட்டை கைவிடாமல் செயல்பட்ட பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி தான் 2017 நவம்பர் 17-19 தேதிகளில் தனது 14 கட்சி காங்கிரசை நடத்தியது. இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நானும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தோழர் பினாய் விசுவமும் கலந்து கொண்டோம். நமது கட்சியின் சார்பில் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1962ம் ஆண்டில் ராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவினார்கள். ராணுவ ஆட்சியை எதிர்த்து பிரேசிலில் சில பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி கொரில்லா யுத்தம் நடத்தியது. ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக ஆட்சி வேண்டுமென்பதற்காக நடத்திய போராட்டத்தில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய தியாகத்தைச் செய்தது. 1985ம் ஆண்டு இராணுவ ஆட்சி அகற்றப்பட்டு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.

புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதிலும் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான பங்காற்றியது. 2002ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தொழிலாளர் கட்சி தலைவரான லூலா கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக தொழிலாளர் கட்சி பிரதிநிதி டில்மா ஜனாதிபதியாக வெற்றி பெற்று 14 ஆண்டுகள் தொழிலாளர் கட்சி ஆட்சி நீடித்தது. 2016ம் ஆண்டு அமெரிக்க ஆதரவோடு இவ்வாட்சி கவிழ்க்கப்பட்டு துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாகியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ள 14 ஆண்டுகளில் ஓரளவுக்கு சுயசார்பு பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு, கல்விக்கும், சுகாதாரத்திற்கும் மொத்த உற்பத்தியில் தலா 10 சதவிகிதம் ஒதுக்கீடு, தொழிலாளர்களின் ஊதியம் இக்காலத்தில் 71.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டது, 18 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டது, விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு போன்ற பல நடவடிக்கைகளை தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசு மேற்கொண்டது. மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கு இவ்வரசு ஆதரவாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஏகாதிபத்திய தலையீட்டினால் தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.

அமெரிக்க ஆதரவு அரசு உருவான பிறகு பொதுத்துறை தனியார்மயம், கல்விக்கு, சுகாதாரத்திற்கு நிதிஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கூடாது என்ற சட்டம், தொழிலாளர் சட்டங்களை திருத்தி உரிமைகள் பறிக்கப்படுவதோடு தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகள் போன்ற 2002 முதல் 2016ம் ஆண்டு வரை இடதுசாரி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை துடைத்தெறிய இன்றைய அமெரிக்க ஆதரவு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க ஆதரவு அரசினுடைய தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் வலுவான இயக்கம் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உழைப்பாளி மக்களினுடைய எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இப்பின்னணியில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு நடைபெற்றது. 60 ஆயிரம் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய 547 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். 27 நாடுகளிலிருந்து 32 கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதர பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு வடிவிலான உறுப்பினர்கள் உள்ளனர். தீவிர உறுப்பினர்கள் 60,000 பேர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது 3,93,312 பேர்.

பிரேசில் நாட்டில் 85 சதவிகிதம் நகரமயமாகியுள்ளது. 2001ம் ஆண்டு நகர்மன்றத் தேர்தலில் 757 உறுப்பினர்களுக்கு போட்டியிட்டு 150ல் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு 2301 இடங்களுக்கு போட்டியிட்டு 1001 இடங்களில் வெற்றி பெற்றது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 2.89 சதவிகித வாக்குகளைப் பெற்று 15 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2017ம் ஆண்டு 1.98 சதவிகித வாக்குகளைப் பெற்று 10 இடங்களில் வெற்றி பெற்றது. தேசத்தில் உள்ள 27 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. நாடு தழுவிய தொழிற்சங்க இயக்கத்தில் இரண்டாவது இடத்திலும், மாணவர் இயக்கத்தில் முதல் இடத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு விதிகளின் படி கட்சிக்கமிட்டிகளில் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் பெண்கள் இருக்க வேண்டும். நடந்து முடிந்த மாநாட்டிலும் அன்றாட கட்சி நடவடிக்கைகளிலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. மாநாட்டு அரங்கத்திற்கு அருகில் பிரதிநிதிகளின் குழந்தைகளை பராமரிப்பதற்கு குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டிருந்தது. கட்சியினுடைய தலைவர் லூசியானா ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு நடக்கவிருக்கின்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் 35 வயதான மனுவேலா என்ற பெண் தோழரை வேட்பாளராக நிறுத்துவது என்று மாநாடு முடிவெடுத்துள்ளது. 

ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவில் 1959ம் ஆண்டிலிருந்து கியூபா மட்டுமே சோசலிச நாடாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சி ஏற்பட்டுள்ளது. சாவேஸ் தலைமையில் வெனிசுலாவில் ஆட்சி அமைந்ததையொட்டி, அர்ஜெண்டினா, உருகுவே, சிலி, பொலிவியா, நிகராகுவே, பராகுவே, ஹோண்டுராஸ், எல்சால்வடார், டொமினியன் குடியரசு போன்ற நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சி ஏற்பட்டு இடதுசாரி அரசுகள் உருவாயின. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் தற்பொழுது வெனிசுலாவில் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. பிரேசிலில் இடதுசாரி அரசு கவிழ்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவலாக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமே வலுவாக உள்ளது. நவம்பர் புரட்சியினுடைய நூற்றாண்டு விழாவையும், மார்க்சின் 200வது பிறந்த நாள் விழாவையும் சுட்டிக்காட்டி 27 நாடுகளிலிருந்து கலந்து கொண்ட சீனா, வியட்நாம், கியூபா போன்ற சகோதர கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மார்க்சியம், லெனினியம் வெல்லும். மனித குலம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சோசலிசமே சரியான தீர்வு என மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார்கள். சோசலிசம் வெல்லும் என்ற முழக்கத்தைத் தொடர்ந்து சர்வதேச கீதத்துடன் மாநாடு நிறைவுற்றது.

பிரேசில் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் தொடர்கிறது.

Leave A Reply

%d bloggers like this: