தேசியக் குற்றப் பதிவுருக்கள் நிலையத்தின் (NCRB National Crimes Records Bureau) சமீபத்திய அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சீராக அதிகரித்திருப்பதையும், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதையும் வெளிப்படுத்துகிறது. 2016இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 3 லட்சத்து 40 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் அதிகமாகும். இவற்றில், 32 சதவீதம் குடும்ப வன்முறை, 25 சதவீதம் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் 11.5 சதவீதம் வன்புணர்வுக் குற்றங்கள் சம்பந்தமானவைகளாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் பொதுவாக பதிவு செய்யப்படாததாலும், அல்லது, அவற்றுக்கான முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படாததாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அநேகமாக குறைந்த மதிப்பீடேயாகும். எனவே இந்த விவரங்கள் அனைத்தும் ஒரு பொதுவான போக்கையே குறிக்கின்றன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை, 2016இல், 1 லட்சத்துப் 10 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.  இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13.6 சதவீதம் அதிகமாகும். குழந்தை வன்புணர்வுக் குற்றங்கள் 2016இல் அதிர்ச்சிதரத்தக்க அளவிற்கு 83 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2015இல் 10,934 வழக்குகளாக இருந்தவை, 2016ஆம் ஆண்டில் 19,920 வழக்குகளாக அதிகரித்திருக்கின்றன.

இவ்வாறு குற்றங்கள் அதிகரித்திருப்பது என்பது நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்புச் சூழல் என்பது மோசமாகியிருக்கின்றன என்பதையே காட்டுகிறது.  பாஜகவானது தன்னுடைய மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சூழல் குறித்து அளித்த உறுதிமொழி இவ்வாறு படுதோல்வி அடைந்திருக்கிறது. இவ்வாறு மிகவும் மோசமான அளவில் சமூகம் சீரழிந்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் உண்டு.

பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுத்திடுவதற்கான கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகளை உருவாக்குவதற்காக 2015இல் நிர்பயா நிதியம் (Nirbhaya Fund) அமைக்கப்பட்டது.  இப்போது அந்த நிதியத்தில் 3,100 கோடி ரூபாய் இருக்கிறது. இந்நிதியத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தையே சாரும். 2,209 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பரிந்துரைத்திருப்பதாக இந்த அமைச்சகம் சார்பில் கடந்த ஜூலை மாதத்தில் கூறப்பட்டது.  ஆனால் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவில் மத்திய அரசு, இந்நிதியத்திற்கு மத்திய அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை வெறும் 264 கோடி ரூபாய்தான் என்று கூறியிருக்கிறது.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஒதுக்கப்பட இருப்பதாக சொன்ன தொகையில் வெறும் 8.5 சதவீதம் மட்டுமே உண்மையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதல்லாமல் பாதிக்கப்பட்டோர் நிவாரணத்திற்காக மாநிலங்களுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தத்தில் இது சுமார்  400 கோடி ரூபாயாகும். எனினும், இந்த நிதியத்தில் ஒதுக்கப்பட்ட தொகை எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று மாநிலங்கள் எதிலுமிருந்து அறிக்கை ஒன்றும் இதுவரை வரவில்லை.

இவை அனைத்தும் இது தொடர்பாக எந்த அளவிற்கு  அரசாங்கம் அக்கறையற்று இருக்கிறது என்பதையே காட்டுகின்றன. அரசாங்கத்தின் சமூகப் பொறுப்பின்மை மற்றும் ஆட்சியிலுள்ளவர்களைக் கவ்விப்பிடித்திருக்கிற மனு(அ)தர்ம சிந்தனையோட்டமும் இதற்குக் காரணங்களாகும்.  பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களை இந்த அரசாங்கம் நீர்த்துப்போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது. உதாரணமாக, குடும்ப வன்முறை தொடர்பான இந்தியத் தண்டனைச் சட்டம் 498- A நீர்த்துப்போகுமாறு செய்யப்பட்டிருப்பதைக் கூறலாம்.   பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளானால் அதுகுறித்து வாயே திறக்காது, அமைதி காக்க வேண்டும், அதுவே முன்னதாரணமிக்க ஒரு நல்ல மனைவியின் அடையாளம் என்றுதான்  லட்சிய இந்து குடும்ப சித்தாந்தம் கூறுகிறது.

ஆனால் இந்தத் தளைகளை அறுத்தெறிந்துவிட்டு, மிகவும் துணிச்சலுடன் தனக்கு ஏற்பட்ட குடும்ப வன்முறைச் சம்பவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ஒரு பெண் முன்வரும்போது, அவரைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் சமூக மற்றும் கட்டமைப்பு வசதிகள் நாட்டில் இல்லை.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறுகிற சமயத்தில் பாதிப்புக்குள்ளான பெண்களையே அதற்குக் குறைகூறுவதையும், பெண்கள் அணியும் உடைகள், நடையுடை பாவனைகள்தான் காரணம் என்று கூறி அவர்களையே இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் அரசியல் தலைவர்களையும் நாம் பார்க்கிறோம்.  இவ்வாறு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களையே காரணமாக்கி, அந்த அடிப்படையிலேயே இவர்கள் நடத்திடும் இயக்கங்கள் காரணமாக பெண்கள் மீதான குற்றங்களை மேற்கொள்ளும் கயவர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் குற்றச் செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

ஆட்சியாளர்களின்  இத்தகைய அக்கறையற்ற அணுகுமுறையின் காரணமாகவும், சமூகத்தின் தரம் மிகவும் தாழ்ந்துபோயுள்ள காரணத்தாலும் சிறுமிகள் கூட மிகவும் அவமானகரமான முறையில் பலியாகியுள்ளார்கள். பள்ளிகளில் படிக்கும் மாணவிகள்கூட சமீபகாலங்களில் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு ஆளாகியிருப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும்  சங்கதிகளாகும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் வழக்குகளிலும்கூட, தண்டனை என்பது 25 சதவீதத்திற்கும் குறைவான விகிதத்திலேயே இருக்கிள்றன. இதனால் இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள் மிகவும் ஊக்கமடைந்துவிடுகிறார்கள். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரின் அக்கறையற்ற அணுகுமுறையும்கூட பெண்களைத் தங்கள் மீது ஏவப்படும் குற்றங்களுக்கு எதிராக முறையீடு தாக்கல் செய்வதற்கு அதைரியத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறே வழக்குப் பதிவுசெய்யப்பட்டாலும் அது நீதிமன்றத்தில் பல ஆண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு, அநீதிக்குத் துணைபோவதுபோல் ஆகிவிடுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்கிற ரீதியில் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதும், அறிக்கைகள் விடுவதும் கண்டிக்கத்தக்கதுமட்டுமல்ல, அத்தகைய அறிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

இதில் மிகவும் முக்கிய பிரச்சனை என்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்குரிய அரசியல் உறுதி ஆட்சியாளர்களிடையே இல்லாததேயாகும்.  அரசாங்கமும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக ஒரு வலுவான கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கு வர்மா குழுப் பரிந்துரைகளை மோடி அரசாங்கம் அமல்படுத்திட முன்வரவேண்டும். அதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவினை நல்கிட வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக, சட்டங்களைக் கறாராக அமல்படுத்திட வேண்டும்.  (டிசம்பர் 6, 2017) தமிழில்: ச.வீரமணி

Leave A Reply

%d bloggers like this: