கொற்றவை அலறுகிறாள்

கெட்டுஅழும் குமரியைச்சூழ்
கேடுகளைத் தாளாமல்
பற்றிஎரி பாழ்நிலத்தின்
பச்சைத்துயர் தாளாமல்
முற்றுவெறி அரசுகளின்
மோசங்களால் பாழாகி
கொற்றவை அலறுகிறாள்
கொடுங்குரலில் அரற்றுகிறாள்

பொங்கும் பெருநெருப்பு
பேரலையாய்ப் பொங்கியெழ
போன புயலதுவின்
புதுவேகம் தான்பற்ற
அப்பன்களைக் காணாது
அரற்றும் பிள்ளைகளின்
தொண்டைக் குரலெங்கும்
துடித்துஎழும் பெருநெருப்பு

கொற்றவைக் குமரியின்
அடிவயிற்றில் நெருப்பாக
உணர்வில் அலையடிக்க
ஓங்காரக் குரலெடுத்து
செத்த மீன்குலத்தார்
சேயிழந்த அன்னையரின்
தொண்டை கிழிகிறது
துயரங்கள் வழிகிறது

பாவி அரசுகளின்
பாதகங்கள் தொடர்ந்து வர
காவிக் கொடுமையர்கள்
காற்றிலெங்கும் விஷம்பரப்ப
தாவி அடிக்குமலை
தன்துயரால் துடித்துவிழ
கேவி அழுகின்றாள்
கேடுற்ற கொற்றவையும்

காற்றில் அலைவுறும்
காலகாலப் பெருந்துயரம்
மேற்கின் புயலழித்த
மேனிகளின் கொடுந்துயரம்
ஆற்றல் மீனவரின்
ஆலகாலப் பெருங்கோபம்
ஆற்றாது விடுஞ்சாபம்
அரசுகளின் அடியறுக்கும்…

அடிவயிற்றுப் பெருநெருப்பு
அரசுகளை எரித்தழிக்கும்
துடிதுடித்துச் செத்தஉடல்
துடித்தெழுந்து கேள்விகேட்கும்
மடிபிடித்துக் கதறியழும்
மாப்பழையோள் கொற்றவையும்
கொடிபிடித்துக் களம்போவாள்
குமரியர்கள் துயரழிக்க.

-ஸ்ரீரசா

Leave A Reply

%d bloggers like this: