புதுதில்லி;
மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய ரூ. 50 நோட்டுக்கள், பார்வை சவால் உடையவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிபுணர்கள் மற்றும் பார்வைத் திறனில் பிரச்சனை உள்ளவர்களிடம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கருத்து கேட்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்திவுள்ளது.மத்திய அரசு வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகள் அனைவருக்கும் ஏற்றதாக இல்லை என்று கூறி வழக்கறிஞர்கள் மூன்றுபேர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், “பழைய 50 ரூபாய் நோட்டில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எளிதில் தொட்டுணரும் வகையில் சதுர வடிவிலான புடைப்பு அமைக்கப்பட்டிருக்கும்; ஆனால் புதிய நோட்டில் அத்தகைய அம்சம் ஏதுமில்லை.

இதனால் புதிய நோட்டின் மதிப்பைக் கண்டறிவதில் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்; இது அவர்களின் அரசிலமைப்பு உரிமையை மீறும் செயலாகும்” என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் (பொ) மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, “புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் பார்வை சவால் உடையவர்களுக்கு ஏற்றதாக இல்லை” குறிப்பிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக நிபுணர்கள் மற்றும் பார்வைத்திறனில் பிரச்சனை உடையவர்களிடம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கருத்து கேட்டு, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Leave A Reply