மும்பை: தாயை கொன்ற தஷ்வந்தை மும்பையில் காவல்துறையினர் கைது செய்த நிலையில் காவல்துறையின் பிடியில் இருந்து அவர் மீண்டும் தப்பி ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு – ஸ்ரீதேவி ஆகியோரின் ஏழு வயது மகள் ஹாசினி கடந்த பிப்ரவரி மாதம் கணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் அவரது குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் தஷ்வந்தை ஜாமினில் விடுதலை செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் தஷ்வந்த பணம் மற்றும் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தஷ்வந்த் மும்பையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மும்பை சென்ற தமிழக காவல்துறையினர் புதனன்று அவரை கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை அழைத்து வர அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து அவரை வியாழனன்று தமிழகம் அழைத்து வர மும்பை விமான நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் மீண்டும் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய தஷ்வந்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply