திருச்செங்கோடு, டிச.7-
மணல் விலையை கட்டுப்படுத்தி, தட்டுப்பாடு இன்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளின் காரணமாக கடந்த ஒரிரு ஆண்டுகளில் மணல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதி உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பொருட்களில் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழில் முற்றிலும் முடங்கி கட்டிட கட்டுமான தொழிலாளர்கள், கட்டிட பொறியாளர்கள், கட்டிட வல்லுநர்கள், மணல்வண்டி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், புதிதாக வீடு கட்டுவோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்டுமான தொழிலையும், தொழிலாளர்களை பாதுகாக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர, ஒன்றியக் குழுக்களின் சார்பில் வியாழனன்று அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரகுழு உறுப்பினர் எஸ்.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.கணேஷபாண்டியன், நகர செயலாளர் ஐ.ராயப்பன், ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply