சென்னை;
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் மோடி அரசின் உத்தரவை திரும்பப் பெறக் கோரி 2018 ஜனவரி 30ல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடுவது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.டிசம்பர் 5ல் கரூர் மாவட்டம், குளித்தலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ஏ. லாசர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் எஸ். திருநாவுக்கரசு, பொறுப்பு செயலாளர் வி. அமிர்தலிங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:100 நாள் வேலைத் திட்டத்தை மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து சிதைப்பதற்கும், முடக்குவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவும் விவசாயத் தொழிலாளர்களது வலுவான போராட்டங்கள் காரணமாகவும் மோடி அரசு தான் நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அதே நேரத்தில் இதை எந்த வகையிலாவது சிதைப்பது என்பதில் கடந்த மூன்றாண்டு காலமாக பிடிவாதமாக முயற்சித்து வருகிறது.

கூலி பாதியாகக் குறைப்பு
100 நாள் வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 60 சதவிகிதமான தொகையை தொழிலாளர்களுடைய கூலிக்காகவும், பொருட்கள் செலவினத்திற்காக 40 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்வது என்று ஒரு கடிதத்தை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தற்போது மறுபடியும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இதில் 51 சதவிகிதம் கூலிக்காகவும், 49 சதவிகிதத்தை பொருட்கள் வாங்குவதற்கு என்று மாற்றியுள்ளது. இது ‘ரேகா’ சட்ட நடைமுறை விதிகளுக்கு விரோதமானது. ஒதுக்கப்படும் நிதியில் 90 சதவிகிதத்தை கூலிக்காக ஒதுக்க வேண்டும் என்ற சட்டவிதிக்கு முரணாக தற்போது மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய நாடு முழுவதும் ஜாப் கார்டு கொடுக்கப்பட்ட அடிப்படையில் தொழிலாளிகளுக்கு கூலிக்காக ஒதுக்க வேண்டிய பணம் ரூ. 80 ஆயிரம் கோடி. ஆனால் மோடி அரசு அதை பாதியாக குறைத்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதையும் கூட முழுமையாக உரிய காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்காததால் வேலை நாட்கள் தமிழகம் போன்ற மாநிலங்களில் 50 நாட்களாக சுருங்கி விட்டது. அதற்கான கூலியும், சட்டக்கூலி ரூ. 205/- கொடுக்கப்படாமல் வெறும் ரூ. 100/-, 110/-, 130/- என்ற அளவில் குறைத்து கொடுக்கப்படுகிறது.

அநியாயமான உத்தரவாதம்
இதனால் தமிழ்நாடு போன்ற கடும் வறட்சி உள்ள மாநிலங்களில் விவசாயத் தொழிலாளிகள் வேலையும் கிடைக்காமல், கூலியும் கிடைக்காமல் மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தினுடைய இந்த கடிதங்களின் அடிப்படையில் மாநில அரசும் இதையே பின்பற்றி மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது.இந்த கடிதங்களில் கிராமப்புறங்களில் ஜாப் கார்டு வைத்துள்ள தொழிலாளர்களை கணக்கில் எடுத்து மொத்த தொழிலாளி, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேலை நாட்கள், அதற்கான கூலி என்பது குறித்து ஒரு பட்ஜெட்டை தயாரித்து அதை கிராம கமிட்டிகளில் வைத்து ஒப்புதல் பெற்று அதை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிக்கு அனுப்பி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு அனுப்பி, அங்கிருந்து அனுமதி பெற்று, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சித்துறை, கிராம பஞ்சாயத்து அலுவலகம் வந்து அதை அமல்படுத்த வேண்டுமென்று ஒரு புதிய நடைமுறையை இந்த கடிதத்தில் அமல்படுத்த வேண்டுமென்று கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

சட்டத்தை அதிகாரிகள் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் விருப்பம் போல் வேலைகளை தீர்மானிப்பது, கூலியை குறைப்பது, தொழிலாளிகளுக்கு சட்ட சலுகைகள் நேரடியாக கிடைப்பதற்கான வழிகளை தடுப்பது என்கிற விதத்தில மோடி அரசினுடைய புதிய உத்தரவுகள் வந்துள்ளன. சட்டத்தையே கவிழ்த்துப் போடுவது என்ற நிலையை அரசு எடுத்துள்ளது. இதை அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் அடிப்படையில் ஜாப் கார்டு வைத்திருக்கிற தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்குவதோடு, வேலை கிடைக்காத தொழிலாளர்கள் மனு கொடுத்தால் வேலை கொடுக்க வேண்டுமென்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஏமாற்றும் எடப்பாடி அரசு
வறட்சி காலமாக இருந்தால் 150 நாள் வேலை தர வேண்டுமென்பது சட்ட விதி. ஆனால் தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அரசு வறட்சி என அறிவித்து விட்டு 150 நாள் வேலையை இதுவரை தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை. தமிழக அரசும், மோடியின் உத்தரவுகளை அப்படியே பின்பற்றி செயல்படுவதினால் தமிழகத்தில் உள்ள 95 லட்ச விவசாயத் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.எனவே, மோடி அரசு தன்னுடைய உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்.
இதற்கு எதிராக 2018 ஜனவரி 30 அன்று தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
குமரி மாவட்டத்தில் நிவாரணம் வழங்குக!

கன்னியாகுமரி மாவட்டம் ஒக்கி புயலினால் கடுமையான அளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இரண்டு லட்சம் விவசாய கூலித் தொழிலாளர்களை கொண்டிருக்கக் கூடிய அந்த மாவட்டத்தில் இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 10 தினங்களாக குடியிருப்பு பகுதிகளில் குடியிருக்க முடியாத நிலையில் தண்ணீர் நிரம்பி, கூரைகளும், வீடுகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதில் மிகப்பெரிய சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அதுபோல் பல்லாயிரக்கணக்கான ரப்பர், தென்னை, தேக்கு மரங்களும் சாய்ந்து கிடப்பதினால் போக்குவரத்து தடைபட்டு, மின் இணைப்புகள் தடைப்பட்டு எந்த இடத்திற்கும் அவசரத் தேவைக்கு கூட வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு இந்த மழையினால் ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

விவசாயத் தொழிலாளிகள் முற்றாக வேலையில்லாமல் வருமானமின்றி உணவின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள் எதுவும் சென்றடையவில்லை.

இந்த தொழிலாளிகளுக்கு உடனடியாக குடும்பத்திற்கு 30 கிலோ விலையில்லா அரிசியும், 3 லிட்டர் மண்ணெண்ணெய்யும், சமையலுக்கான பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலத்திற்கு மாதம் ரூ. 5,000/- நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறு-குறு விவசாயிகளுடைய கடுமையான விவசாய பாதிப்புகளுக்கு வாழை, தென்னை, ரப்பர், நெல் போன்ற விவசாய சேதங்களுக்கு அதற்குரிய நஷ்ட ஈடுகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.

மரணமடைந்தவர்களை முற்றாக கணக்கில் எடுத்து, காணாமல் போன மீனவர்கள் உட்பட இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு கொடுத்தது போல் ரூ. 20 லட்சம் வழங்கிட வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: