புதுதில்லி, டிச.7-

ஜெருசேலம் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்றிடவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முடிவெடுத்திருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது.

கிழக்கு ஜெருசேலம், 1967இலிருந்தே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்கிற ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. கிழக்கு ஜெருசேலத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு சுதந்திரமான ஜெருசேலம் அமையவேண்டும் என்பதே சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடாகும்.

இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பகுதிகளை சட்டபூர்வமாக்கிட அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருக்கிறது. உலகில் உள்ள வேறு எந்த நாடும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்திற்கு அங்கீகாரம் கொடுத்திடவில்லை.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே எவ்விதமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதைத் தடுத்திடும் வேலைகளுக்கும் அமெரிக்கா பொறுப்பாகும். டொனால்டு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை இப்பிராந்தியத்தில் மேலும் பதட்டத்தையும், மோதல்களையும் கொண்டுவரும்.

இந்நடவடிக்கைக்கு உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்புத்தெரிவித்திருப்பதைப் போல் அல்லாமல், மத்திய அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் முடிவை, அமெரிக்கா எங்கே புண்படுமோ என்ற பயத்துடன்,  விமர்சிக்க மறுத்திருக்கிறார்.  மோடி அரசாங்கம் எந்த அளவிற்கு அமெரிக்காவின் கொத்தடிமையாக மாறியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக நிராகரித்திட வேண்டும் என்று மோடி  அரசாங்கத்தை அரசியல் தலைமைக்குழு கோருகிறது. ஏனெனில், இது பாலஸ்தீனத்தின் நலன்களுக்காக இந்தியா பின்பற்றிவந்த நீண்ட நாளைய நிலைப்பாட்டிற்கு எதிரானதாகும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: