சேலம், டிச. 7-
சேலம் அரசு மருத்துவமனையில் முறையான சம்பளம் மற்றும் பிஎப் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் வியாழனன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பத்மாவதி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அரசு மருத்துவமனையில் காவலாளி, துப்புரவு மற்றும் உதவியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு அந்த நிறுவன மூலம் மாதம் ரூ.5,400 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தபோதும், இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் ஆவேசமடைந்த ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டோர் வியாழனன்று மருத்துவமனையின் முன்பு திரண்டனர். பின்னர் மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர், காவல் உதவி ஆணையர் அன்பு உள்ளிட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேலம் சூப்பர்
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் எங்களுக்கு ரூ.5,400 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதுவும், விடுமுறை இல்லாமல் கூடுதல் நேரம் பணி புரிய கட்டாயப்படுத்தப் படுகிறோம். இதன்பின் வழங்கப்படும் குறைந்த சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, சம்பளத்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: