திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தில் மது அருந்துவதற்கான வயது வரம்பை, 21-இல் இருந்து 23-ஆக உயர்த்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.கேரளத்தில் இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாவதைக் குறைப்பது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சரவை கூடி விவாதித்தது. அதில், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

23 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் கேரள அரசின் மதுபானச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அமைச்சரவையின் இந்த பரிந்துரை, கேரள ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநரின் அனுமதி கிடைத்ததும், இந்த புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்றும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேரள அரசின் வரி வருவாய் ரூ. 40 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில் 25 சதவிகிதம் மது விற்பனை மூலம் கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு மதுவிலக்கு உடனடி சாத்தியமில்லை என்றாலும், மது பழக்கத்தையும், விற்பனையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் கூறியிருந்தார்.
அதனடிப்படையிலேயே தற்போது மது அருந்துவதற்கான வயது வரம்பு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: