குஜராத் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாகவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அங்கு தேர்தலை மிக தாமதமாக அறிவித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதனைவிட கடுமையான வெள்ளப்பெருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டபோதும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நிவாரண பணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தேர்தலை சிறிது காலம் தாழ்த்தி நடத்துமாறு குஜராத் அரசு கேட்டுக்கொண்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக, குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் ஒரே நேரத்தில் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மட்டும் நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. ஆனால், குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை.

இதையடுத்து, குஜராத்தில் ஆளும் பாஜக அரசு மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்,தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்தால் குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதன்பின், குஜராத் மாநிலத்திற்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார்.

இதனிடையே, தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கப்பட்டதால், மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, பல நிதியுதவிகள், பெரும் திட்டங்களை மாநிலம் முழுவதும் தொடங்கின. பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் உரை நிகழ்த்தினர்.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கடும் வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், அங்கு குறித்த நேரத்தில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதனால், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அங்கு வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காஷ்மீர் 2014-ஆம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கை சந்தித்தது. அதில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகளான வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா, நசிம் ஜைதி ஆகியோர், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை தாமதமாக நடத்த விரும்பவில்லை. நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தனர். அத்தேர்தலில், 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை, கடந்த 25 ஆண்டு கால காஷ்மீர் தேர்தல் வரலாற்றில் அதிகமான வாக்குகளாகும்.

இதுகுறித்த ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

* குஜராத் மாநிலத்தைபோன்று, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் வெள்ள மீட்பு பணிகளுக்காக தேர்தலை தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அனுப்பியுள்ளது. ஆனால், அப்போதைய தேர்தல் ஆணைய துணை ஆணையர் வினோத் சூட்சி, இதனை ஆணையம் கருத்தில் எடுத்துக் கொண்டதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் பதில் தெரிவித்துள்ளார்.

*கடந்த நவம்பர் 5, 2014-ஆம் ஆண்டு அமைச்சரவை செயலாளர், ஜம்மு – காஷ்மீர் தலைமை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில், வெள்ள மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்திக் கொள்வதாக தெரிவித்தது.

* ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, வெள்ளத்தினால் தங்கள் வீடுகளை இழந்த 18,000 பேரின் மீட்பு பணிகளுக்காக ரூ.27.5 கோடி ஒதுக்கப்பட்டதன் குறிப்பு.

* வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்துதல், ஆய்வு குறித்து உள்துறை அமைச்சகம் கூட்டம் நடத்தியது.

* ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில நிதி அமைச்சகம் அறிவித்தது.

* வெள்ளம் காரணமாக கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தின் நூலகத்தை 24 மணிநேரமும் திறந்துவைக்க கோரும் கடிதம்.

இதுதவிர, வெள்ள மீட்பு பணிகள் காரணமாக தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய குஜராத் தலைமை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தின் நகலையும் மற்றொரு ஆர்.டி.ஐ. மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோரியது. ஆனால், செப்டம்பர் 27 மற்றும் அக்டோபர் 2 தேதியிட்ட அந்த கடிதங்களை ’சமர்ப்பிப்புக்கு உட்பட்டது’ என்ற காரணத்தை கூறி அதன் நகல்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. மேலும், அந்த இரண்டு கடிதங்களுக்கும் குஜராத் தலைமை செயலகத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதும் ஆர்.டி.ஐ.யில் தெரியவந்துள்ளது.

  • www.ietamil.com

Leave A Reply

%d bloggers like this: