கன்னியாக்குமரி,
ஓகி புயலின் போது கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்க கோரி 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓகி புயலால் கன்னியாக்குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. ஏராளமான மரங்கள் முறிந்தன. புயல் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலர் மகாராஷ்டிரா குஜராத் பகுதிகளில் கரை ஒதுங்கினர் மேலும் பல மீனவர்கள் இன்றுவரை மீட்கப்பட வில்லை. காணாமல்போனவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய தமிழக அரசு மீட்புப்பணியில் மெத்தன போக்கை கடைபிடிப்பதாக கன்னியாகுமரி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் மீட்கக் கோரி 5000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி ரயில் மறியல் செய்வதற்காக நீரோடி முதல் இரயம்மன் துறை வரையிலான மக்கள் பேரணியாக சுமார் 25 கி.மீ வரை நடந்து சென்று ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களில் 1,159 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீனவர்ககை மீட்கக்கோரி முழக்கங்களை எழுப்பியவாறும், கருப்பு கொடி மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் ஈடுபட்டவர்கள் நடந்து செல்கின்றனர். பள்ளி மாணவ மாணவிகளும் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply