திண்டுக்கல்;
இடஒதுக்கீடு என்பது சலுகை என்று சொல்கிறார்கள். நமது முன்னோர்கள் போராடி பெற்றதால் உனக்கு கிடைத்த உனக்கான பங்கீடு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் ரஞ்சித் திண்டுக்கல் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.

செவ்வாயன்று நடைபெற்ற சிந்தனையரங்கத்தில் திரை மாற்றத்திற்கான கருவி என்ற தலைப்பில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியதாவது.
சமீப காலமாக தமிழகத்தில் சாதியின் வன்மம் கூர்மையடைந்துள்ளது. சாதியும், மதமும் நம்மை சண்டையிட வைக்கின்றன. ஆணவப்படுகொலைகள் நடைபெறுகின்றன. இந்தியா பெரிய வல்லரசாக வேண்டும் என்கிறோம். ஆனால் சாதி மதம் பெயரால் இங்கே சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன்பு போல் அல்லாமல் இப்போதெல்லாம் சினிமா கொஞ்சம் மாறி வந்துள்ளது. சமூக பிரச்சனைகளை சொல்கிறது. ஆரம்பத்தில் பராசக்தி ஒரு அற்புதமான படைப்பாக வந்தது.

பிச்சைக்காரர்களின் பிரச்சனைகளை சொன்னது. மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து திராவிட இயக்கம் அன்றைக்கு ஆட்சியை கைப்பற்றியது. எம்.ஜி.ஆரும் 80களில் தனி மனித துதிபாடும் படங்களை எடுத்தார். இப்போது தமிழ் சினிமாவில் மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தப்பட்ட படங்களை எடுக்கும் இளம் இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். வணிக ரீதியான அத்தகைய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நான் ஓவியக் கல்லூரியில் பயின்றேன். ஒரு ஆர்ட் டைரக்டராக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. எனது கல்லூரியில் உலக திரைப்படவிழா நடத்தப்பட்டது. அதில் சில்ரன் ஆப் ஹெவன், உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்பட்டன. அப்போது தான் நாம் ஏன் இப்படிப்பட்ட படங்களை எடுக்கக்கூடாது என்று யோசித்தேன். அதிலும் சினிமாவில் ஏன் அரசியல் பேசக்கூடாது என்றும் யோசித்தேன். அப்படித்தான் நான் எனது மெட்ராஸ் படத்தில் அரசியலை பேசினேன்.

அந்த படம் சென்சார் போர்டுக்கு போனது. அப்போது எனது படத்திற்கு ஏ.சர்டிபிகேட் தருவதாக கூறினார்கள். ஏன் ஏ சர்டிபிகேட் தருகிறீர்கள் என்று கேட்ட போது சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் எல்லாம் ரவுடிகள் என்றும் இந்த படத்தில் கூடுதலான வன்முறை இருப்பதாகவும் கூறினர். இது சென்சார் போர்டின் வன்முறை என்று நான் கருதினேன். ஆனால் மெட்ராஸ் படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அட்டக்கத்தி 3 நாள் ஓடியது. படம் நல்லா இல்லை என்று பிரச்சாரம் நடந்தது. ஆனால் அந்த படம் வெற்றி பெற்றது.

சென்னை 28 படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன் அந்த படமும் ஓடாது என்றனர். ஆனால் அந்த படமும் வெற்றி படமானது. மக்கள் பிரச்சனையை மையப்படுத்தி எடுத்த படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளன. வீடு படம் மிக அற்புதமான படம். மாவோ கலை மக்களுக்காக என்றார். அந்த வகையில் மக்களுக்கான திரைப்படங்களை நான் எடுத்து வருகிறேன். ஜி.எஸ்.டி வரி குறித்தான வசனம் உள்ள படத்திற்கு கடுமையான எதிர்ப்பு அரசு தரப்பில் இருந்து வந்தது. மக்கள் அதனை வரவேற்றார்கள். சமூக மாற்றத்திற்கான கருவி என்று தான் நமது இளம் இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள். நமது மூளையில் சாதியின் அழுக்கு இருக்கிறது.

உங்கள் மனிதத்தன்மையை சுயவிமர்சனம் செய்யுங்கள். எனது அம்மா அப்பா இன்னும் சேரியில் தான் வசிக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் தலித்தா இல்லையா என்கிற ஆராய்ச்சி நடைபெறுகிறது. சாதியின் வலி அதிகம். சமூகத்தில் சாதி என்கிற களை களையப்பட வேண்டும். ராக்கெட் விட்டால் அது வளர்ச்சி இல்லை. சாதி மதங்களற்ற சமூகமாக பண்பாடான சமூகமாக மாற வேண்டும். அது தான் வளர்ச்சி. மனித மூளை ஏற்றத்தாழ்வை, அடக்குமுறையை விரும்புகிறது. அந்த மூளையை அதன் சிந்தனையை நாம் கழற்ற தயாராக இல்லை.

நமது தெரு சாதியாக இருக்கிறது. நமது வீடு சாதியாக இருக்கிறது. இந்த முரண்பாடு குறைய நாம் எப்போது பொது வெளியில் விவாதிக்க போகிறோம். இத்தனை நூற்றாண்டுகளாக ஏன் சாதி இங்கே வேர்விட்டு இருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பை அடுத்து இடைநிலை சாதிகள் அதிகாரத்திற்கு வந்த பிறகும் ஏன் சாதி ஒழியவில்லை என்ற கேள்வி நம் முன் உள்ளது. சேரித்தமிழன் ஊர் தமிழன் என்ற வேறுபாடு ஏன் இன்னும் உள்ளது. ஏன் ஒரே தமிழனாக மாற முடியவில்லை. சமூக நீதி மாநிலமாக உள்ள இந்த தமிழகத்தில் தான் இடஒதுக்கீடு உள்ளது. அனைத்து சமூகத்தினரும் இடஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள். ஆனால் தலித்துக்கள் மட்டும் இடஒதுக்கீட்டை அனுபவிப்பதாக கூறுகிறார்கள். பட்டியலினத்தில் பல சாதி உட்பிரிவுகள் உள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பல சாதி உட்பிரிவுகள் உள்ளன. இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. சிலர் அதனை வேண்டாம் என்கிறார்கள். நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற உரிமை மட்டுமல்ல அது உனது சமூகத்திற்கு கிடைத்த பங்கீடு. அதனை மறுக்க யாருக்கும் உரிமை இல்லை.

உளவியல் ரீதியாக நாம் பாதிக்கப்பட்ட சமூகமாக இருக்கிறோம். நீங்கள் மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் அடிப்படைவாதிகளாக இருக்கிறோம். ஒரு அநியாயம் நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கு பதிலாக விலகிச் செல்கிறோம். அது குறித்து விவாதிக்க மறுக்கிறோம். சிலர் அரசியலுக்காக நம்மை சாதி வெறியராகவும், மத வெறியராகவும் மாற்ற முயற்சிக்கிறார்கள். அது கலவரமாக மாறுகிறது. அது தான் குஜராத்தில் நடந்தது. மகாராஷ்டிராவில் நடந்தது. உன்னுடைய அடையாளத்தை வைத்து தான் மற்றவரை எதிர்க்க முயற்சிக்கிறாய். சாதியை மதத்தை பற்றி பேசுகிறவர்களை எதிரிகளாக பார்க்கிறோம். சாதியை எதிர்ப்பவர்களையும் சாதிவெறியராக நிலைநிறுத்துகிறார்கள். நான் சாதி வெறியர்கள் மத்தியில் பேசவில்லை. புத்தக திருவிழாவிற்கு வந்த ஒரு அறிவார்ந்த சமூகத்திடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதனால் தான் நான் பேசுவதை நீங்கள் எந்த எதிர்ப்பும் இன்றி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். சாதி குறித்த விவாதம் இங்கு நடைபெற வேண்டும் என்கிறேன்.

மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் அங்குள்ள ஒரு மாணவனை அழைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அந்த குழந்தை படிக்கத்தானே வந்தது. ஒரு ஆசிரியர் சாதி பற்றுள்ளவராக இருந்தால் அவரிடம் படிக்கும் மாணவர்களும் சாதி சிந்தனை உள்ளவர்களாக மாற வாய்ப்புள்ளது. நம்மை பிரிக்கும் சக்தி இங்கு சாதியாக மதமாக இருக்கிறது. அது தான் இங்கு பிரச்சனை என்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள் சாதியும், மதமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் ஆகிய 3 பேரையும் தவிர்த்துவிட்டு இங்கு சமூக மாற்றம் இல்லை.

ஆனால் மார்க்சை பெரியாருக்கு எதிராகவும், பெரியாரை அம்பேத்காருக்கு எதிராகவும், அம்பேத்காரை மார்க்சுக்கு எதிராகவும் நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்னையும் பெரியார் சிந்தனைக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கிறார்கள்; எனக்கு பெரியார் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு அவரை பயன்படுத்திக்கொள்வேன். இந்தியாவில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் இல்லை. உலகம் முழுவதும் உள்ளார்கள். அமெரிக்காவில் கருப்பினத்தில் இருந்து ஒபாமா அதிபராகி இருக்கலாம். ஆனால் அங்கு இன்னமும் கருப்பின மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களாகத்தான் உள்ளனர். தனித் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமையை ஆற்றவில்லை.

அந்த பிரதிநிதிகள் தங்கள் கட்சியின் பிரதிநிதிகளாகத்தான் செயல்பட்டார்களே ஒழிய தலித் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பது எனது கருத்து. சினிமா சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற வேண்டும். பல்வேறு தளங்களில் நாம் விவாதிக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை படமாக்க வேண்டும். புத்தகம் உங்களை யோசிக்க தூண்டும். இன்றைக்கு புத்தக திருவிழாக்கள் நடைபெறுவது ஒரு வரலாற்றுத் தேவையாக இருக்கிறது. இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார். இந்நிகழ்ச்சியில் ரஞ்சித்திடம் பலர் கேள்விகளை கேட்டனர்.

அந்த கேள்விகளை இலக்கிய களத்தின் தலைவர் முனைவர் குருவம்மாள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு இணைச் செயலாளர் முனைவர் சரவணன் தலைமை வகித்தார். ஸ்ரீரமணாஸ் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் பொறியாளர் கே.ஏ.ராதாகிருஷ்ணன், தாளாளர் உ.மீனாட்சிசுந்தரம், பிக் டிரீமர்ஸ் அகாடமியின் தாளாளர் பொறியாளர் டி. பிரேம்குமார், டட்லி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சி.ஸ்டாலின் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்.கணேசன் நன்றி கூறினார். (நநி)

Leave A Reply

%d bloggers like this: