கோவை, டிச.6-
ஹராயின் கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டு இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நைஜீரியா நாட்டினை சேர்ந்தவர் ஜேம்ஸ் (35). இவர் ஈரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக வந்தார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருப்பூரில் இருந்து துணிகளை வாங்கி நைஜீரியா உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இதில் நஷ்டம் அடைந்ததால், பேன்சி பொருட்கள், பரிசுபொருட்கள் எனும் பேரில் கொரியர் சர்வீஸ் மூலம் ஹராயின் உட்பட போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 23.05.2012 அன்று, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனத்தில் இருந்து பேன்சி பொருட்கள் அடங்கிய பார்சலை பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பினார். சந்தேகம் அடைந்த கொரியர் நிறுவனத்தினர், போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர், பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.1 கோடி மதிப்புள்ள அரை கிலோ ஹெராயின் இருந்தது. இதையடுத்து, போதைபொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்து, ஜேம்ஸை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை அத்தியாவசிய பண்டங்கள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நீதிபதி அல்லி முன்னிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை செவ்வாயன்று வந்தது. இந்த விசாரணையின் இறுதியில் ஜேம்ஸ் மீதான போதை பொருள் கடத்தல் குற்றம் நிருபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதன்பின் இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: