புதுதில்லி, டிச. 6-

வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களிடம் அதீதமாகக் கட்டணங்கள் வசூலிப்பதை முறைப்படுத்திட நாடாளுமன்றம் உரிய சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் சட்டத் தொழில் வணிகமயமாக்கப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும், நாட்டில் ஏழை மக்களுக்கும் சம நீதி கிடைத்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க் கிழமையன்றுஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளார்கள்.

சுனிதா என்பவர் தெலங்கானா மாநில அரசுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல் மற்றும் யு.யு. லலித் ஆகியோரடங்கிய அமர்வாயம் இவ்வாறு தீர்ப்பு அளித்திருந்தது. அந்தத் தீர்ப்பில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:

ஏழைகளிடமும், அடித்தட்டு மக்களிடமும் அதீதமான முறையில் கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்திடவோ, முறைப்படுத்திடவோ நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கமோ, நீதித்துறையோ இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

வழக்கறிஞர்களின் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று 1988ஆம் ஆண்டிலேயே சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால் அந்தப் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சட்டத் தொழிலின் முக்கிய சாராம்சமே நீதியைப் பெறுவது என்பது செலவில்லாத விதத்தில் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் மாண்பினை உயர்த்திப்பிடித்திடக்கூடிய விதத்தில் உரிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் கூறியிருக்கின்றனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்பவரின்  கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது இறப்பின் மீதான இழப்பீட்டுக்காக தெலங்கானா கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த வழக்குரைஞர், சுனிதாவிடம் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்றிருக்கிறார். இந்த வழக்குரைஞர் சுனிதாவிடம் இந்த வழக்கை நடத்துவதற்காக ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் கட்டணம் பெற்றுள்ளார்.

சுனிதாவின் நம்பிக்கைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் மோசம் செய்துவிட்டார் என்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும்போதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளார்கள். அவர்கள் மேலும், “சட்டத் தொழிலின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, சட்ட அமைப்பு முறையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்ததாகும்,” என்றும் கூறியுள்ளார்கள்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: