பேரா. பிரபாத் பட்நாயக்
வங்கிகளின் வராக்கடன் குறித்து அதிகம் பேசப்படும் காலம் இது. வராக்கடன் என்பது புரிந்து கொள்வதற்கு எளிதான பதமே எனினும், அதன் பின்னணியில் இருக்கும் சூது-வாதுகளை புரிந்து கொள்வது இங்கு அவசியமாகிறது. ஏனெனில், இது வங்கிகளின் பிரச்சனை மட்டும் அல்ல, அரசின் நவீன-தாராளவாதக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்த மக்களின் பிரச்சனை.

பொதுவாக, வங்கிகளில் உரிய காலத்தில் திருப்பி அடைக்கப்படாத கடன் வராக்கடன் என அழைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர்கள் உண்மையில் ஏதேனும் தற்காலிகமான சிக்கலில் மாட்டிக் கொண்டார்களா அல்லது அடிப்படையிலேயே இனி அவர்களால் திருப்பி அடைக்க முடியாத நிலையா என எளிதில் முடிவு செய்ய முடியாது. எனவே, இவை இன்று இடர்ப்பட்ட கடன்கள் (STRESSED ASSETS) என்று சற்று விரிவான பொருளில் அழைக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில்…
இந்தப் பிரச்சனை நீண்ட காலமே இருந்து வந்தாலும், அண்மைக்காலங்களில், அதாவது நவீன –தாராளவாதக் கொள்கைகள் தீவிரமாக அமலான பின்னணியில் அது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த காலங்களில் வணிக வங்கிகள் குறுகிய கால கடன்களை மட்டுமே வழங்கும். இந்தக் கடன்களும் கூட கடன் வாங்குபவரின் தொழில் இருப்புச் சரக்கு (INVENTORIES), வருமானம் போன்றவற்றை பிணையாக வைத்து வாங்கப்படும் கடன்களே. நீண்ட காலக் கடன் கொடுப்பதற்கென, இந்திய தொழில் மேம்பாடு வங்கி (IDBI) , இந்திய நிதி கழகம் (IFC) , மாநில நிதி கழகங்கள் (SFCs) போன்ற இதற்கான சிறப்பு நிறுவனங்கள் அப்போது இருந்தன. சீர்திருத்தங்களுக்குப் பின்னர் நிலைமை மாறி விட்டது. இந்த நிறுவனங்களின் முக்கியத்துவம் தொலைந்து போனது. இப்போது ஐடிபிஐ (IDBI) வங்கியாக மாற்றப்பட்டு விட்டது.

இந்த நிறுவனங்கள், இருப்புச் சரக்கின் பிணையில் அன்று நீண்ட காலக் கடன்களை வழங்கின. கடன் திரும்ப வராது என்ற நிலை உறுதியாகும் பட்சத்தில், அவை இருப்புச் சரக்கைக் கைப்பற்றி கடனை நேர் செய்து விடும். இதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இந்த நடைமுறை வராக்கடன்களை பெருமளவு கட்டுக்குள் வைத்திருந்தது.

வராக்கடன் ?
வங்கிகளின் (குறிப்பாக நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின்) வராக்கடன் மூன்று காரணங்களால் உருவாகிறது.

1. தொழில் தொடங்கும்போது இருந்த சூழலில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்கள் தொழிலில் உருவாகும் சிக்கல்கள். இவை ஓரளவு உண்மையானவையும் கூட. 2. தொழில்கள் கடன் கோரும் போது, அந்தத் திட்டங்கள் அவ்வளவாகத் தேறாது என வங்கிகள் கருதினாலும், கடன் வழங்குவதற்கான இலக்குகளை முன்வைத்து அரசு நிர்ப்பந்திக்கும் போது, அத்தகைய தொழில்களுக்கு மனமில்லாமல் கொடுத்த கடன். அது தவிர, தங்களது சொந்தக் கணிப்பிலேயே, அத்திட்டங்கள் லாபகரமாக இருக்கும் என்று நம்பி கொடுத்த கடன். பின்னால், இவை எல்லாம் வராக்கடன்களாக மாறி விட்டன.

3. மூன்றாவது தான் மிகக் கொடூரமானது. மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் திட்டமிட்டு வங்கிகள் மீது நடத்தும் கொள்ளைத் தாக்குதல் இது. திருப்பித் தருவதில்லை என முன் கூட்டியே முடிவு செய்து விட்டு, தங்களது அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி, வங்கிகளை நிர்ப்பந்தித்து பெற்ற கடன்கள் இவை.

இத்தகைய வராக்கடன் இன்று சுமார் ரூ.8 லட்சம் கோடி எனவும், இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 75 சதவீதம் எனவும் கூறப்படுகிறது. இதில் முதல் பத்து (டாப் டென்) பட்டியலில் அம்பானி (1.25 லட்சம் கோடி), அதானி (ரூ.96,031 கோடி) உட்பட பலர் அடங்குவர். இவர்களோடு ஒப்பிடும் போது, ஓடிப்போன விஜய் மல்லையாவின் கடன் ரூ.9,000 கோடி மட்டுமே. “ஐயோ பாவம் விஜய் மல்லையா” என யாராவது சொன்னாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

மடைமாற்றம்!
விஷயம் இத்துடன் முடியவில்லை. இப்படி வாங்கிய கடனை தொழில் திட்டங்களில், குறிப்பாக கட்டமைப்புத் திட்டங்களில் ( இதை ரியல் எஸ்டேட் என்று புரிந்து கொள்ள வேண்டும்) முதலீடு செய்ததாகவும், ஆனால், புறநிலைக் காரணங்களால் பொருளாதார ரீதியாக அவை செயலற்றுப் போயின எனவும், இவர்கள் சாக்குப்போக்குச் சொல்லி வருகிறார்கள்.  ஆனால் உண்மையில், வாங்கிய கடன் தொகையில் 75 சதவீதத்தினை, முதலீட்டில் ஈடுபடுத்தாமல், தங்களது சொந்தப் பாக்கெட்டுகளுக்கு மடைமாற்றம் செய்து கொண்டார்கள் என மற்றொரு கணிப்பு கூறுகிறது. அதாவது கடன் தொகையில் 52.5 சதவீதம் (75 சதவீதத்தில் 75 சதவீதம்) முதலீடு செய்யப்படாமலேயே இந்தப் பெரு முதலாளிகளின் பாக்கெட்டிற்குச் சென்றிருக்கிறது. இன்று வங்கிகளின் வராக்கடன் குறித்துப் பேசும் போது, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் செயல் திறன் குறைந்தவை எனச் சாடுகின்றனர். இந்தக் கடன்களை வாங்கி ஏமாற்றியிருக்கும் தனவான்களும், இதை உரத்த குரலில் விமர்சனம் செய்வது தான் இங்கு கூடுதல் சோகம். வீட்டைக் கொள்ளை அடித்த கொள்ளைக்காரனே, பறிகொடுத்த வீட்டுக்காரனை ஏமாந்த சோணகிரி என்று ஏகடியம் செய்தால் என்ன செய்வது?

விவசாயிகளின் கடன்!
விவசாயிகளின் கடன் மொத்த வராக்கடன் அளவில் மிகவும் குறைவானதே. விதைக் கம்பெனிகள், குளிர்பதனக் கிடங்குகள் போன்ற அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்களும் இன்று விவசாயிகள் என வரைமுறைப் படுத்தப்பட்ட நிலையில், மொத்தக் கடனில் அவர்களின் பங்கு கணிசமானது. (அம்பானி, அமிதாப் பச்சன் போன்றோர் எல்லாம் இன்று விவசாயிகள் என்பதையும், விவசாயக் கடன்களில் 25 சதவீதம் நகர்ப்புற, பெரு நகர் வங்கிக் கிளைகள் மூலமே வழங்கப்படுகின்றன என்பதையும் இங்கு நினைவில் கொள்க). மறுபுறத்தில் சாதாரண ஏழை எளிய விவசாயிகளின் நிலைமை உண்மையிலேயே மோசமானது. அந்த வராக்கடன் தான் நாம் மேலே குறிப்பிட்ட முதல் வகை வராக்கடன். அதாவது, விவசாய நசிவு, பயிர்க் காப்பீட்டில் உள்ள பலவீனங்கள், இறக்குமதி வேளாண் பண்டங்களுடனான போட்டியால் உள்நாட்டுச் சந்தையில் தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போனது, அரசின் ஆதரவு விலை வெட்டிச் சுருக்கப்பட்டது போன்ற உண்மையான காரணங்களால் உருவானவை. 

இது போன்ற விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் போது பெரு முதலாளிகளின் ஆதரவுச் சக்திகள் பெரும் கூச்சல் போடுகின்றன. இது அறநெறிப் பிறழ்வுக்கு (MORAL HAZARD) இட்டுச் செல்லும், அதாவது வாங்கிய கடனை திருப்பிக் கட்டத் தேவை இல்லை என்ற கருத்தினை உருவாக்குகிறது என அவர்கள் கூறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் ரூ. 3,60,912 கோடி வரை கார்ப்பரேட் கடன்கள் ரத்து செய்யப்பட்ட போது, அதை மௌனமாக ஆமோதித்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் விவசாயிகளின் கடன் என்று வரும் போது துடித்துப் போகிறார்கள்.

தனியார்மயமாக்கலே தீர்வாம்!
வராக்கடன் நெருக்கடியில் பொதுத்துறை வங்கிகளே அதிகம் பாதிக்கப்பட்டதை வைத்து, அது அவற்றின் திறன் குறைவே காரணம் எனக் கூறி, அவற்றை தனியார் வசம் கொடுக்க வேண்டும் என்று பெருமுதலாளிகளின் சார்பில் கோரிக்கைகள் எழுகின்றன. வங்கிகள் அரசின் எதேச்சதிகார கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒரு ஜனநாயகப் பூர்வமான கட்டுப்பாட்டு முறையில், – எடுத்துக்காட்டாக நாடாளுமன்றக் கமிட்டி ஒன்றின் கண்காணிப்பில் – இயக்கப்படுவதே இதற்கு உரிய தீர்வாக அமையும்.அப்படிச் செய்தால், யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது, கடனை எப்படி திரும்பப் பெறுவது போன்றவற்றிற்கு மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் வழிகாட்டுதலைப் பெற முடியுமே! 

வராக்கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசு அண்மையில் கண்டுபிடித்திருக்கும் வழி என்ன? மக்களின் வரிப்பணத்திலிருந்து வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குவது (RECAPITALISATION) தானே? விவசாயிகளின் கடன் ரத்தினை “அறநெறிப் பிறழ்வு’ என வர்ணித்த பொருளியல் வித்தகர்கள், கார்ப்பரேட் பெருந்தனக்காரர்கள் உருவாக்கிய நட்டத்தை ஈடு கட்ட மக்களின் வரிப்பணம் செல்லும் போது வாய் மூடி நிற்பது ஏன்?

யார் தலையில் கை வைத்து?
இப்படி வரிப்பணம் வங்கிகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டால், பாதிப்பு யாருக்கு என்பதும் தெரிந்தது தானே? மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் ( MNREGA), ஒருங்கிணைந்த சிறார் மேம்பாட்டுத் திட்டம் (ICDS) போன்ற நலிந்த பகுதி மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தானே? வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கும் போதே, வாங்கிகள் தங்கள் பங்குகளை சந்தையில் விற்க வேண்டும் என்பதும் தனியார் மயம் நோக்கிய கூடுதல் நிர்ப்பந்தம் தானே? சபாஷ்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

அவர்களால் எப்படி முடியும்?
கார்ப்பரேட் கடன்களை திரும்பப் பெறுவதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? 1.கோடிக்கணக்கில் கடன் பெற்று, அதைச் செலுத்தத் தவறியவர்களின் பட்டியலை பொது வெளியில் வெளியிட வேண்டும். வங்கியில் உள்ள தொழிற்சங்கங்கள் மட்டுமே தற்போது இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

2. அத்தகையவர்கள் கடனைத் திருப்பிக் கட்டாமலிருப்பதன் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கான சுதந்திரமான விசாரணை குழுக்களை அமைத்துச் செயல்பட வேண்டும்.

3. திட்டமிட்டு ஏமாற்றுபவர்களின் சொத்துக்களை, கம்பெனிகள் என்றால் கம்பெனிச் சொத்துக்களை கையகப்படுத்தும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
இதை எல்லாம் செய்தால் கண்டிப்பாக வராக்கடன் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஆனால், இந்த அரசு அதைச் செய்யாது. ஏன்? இதை எல்லாம் செய்தால், கார்ப்பரேட் நிதி உதவி கிடைக்காது. கார்ப்பரேட் ஊடகங்களின் பிரச்சார ஆதரவும் கிடைக்காது. அது தான் மோடியின் முக்கிய கவலை.

– ஆதாரம் : பீப்பிள்ஸ் டெமாக்ரசி (3.12.17) கட்டுரை
தொகுப்பு : இ.எம்.ஜோசப்

Leave A Reply