ஈரோடு,டிச.6-
ரேசன் பொருட்கள் கோரி ஈரோடு அருகே பொதுமக்கள் ரேசன்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் பகுதியில் உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியில் 13 மற்றும் 14 ஆகிய எண் கொண்ட இரண்டு கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கமலா நகர், சிந்தன் நகர், ராமமூர்த்தி நகர், வண்டியூரான் கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகிகப்பட்டு வருகிறது. இச்சூழிலில் இரண்டு கடைகளிலும் கடந்த ஒரு வார காலமாக பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ரேசன் பொருட்கள் வாங்க புதனன்று பொதுமக்கள் வந்துள்ளனர். ஆனால், கடை ஊழியர்கள் பொருட்கள் வழங்க மறுத்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:- கடந்த ஒரு வார காலமாக சரியான முறையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யவில்லை. அதேநேரம், பொருட்கள் வாங்கும்போது கட்டாயமாக கடலை பொட்டலம், தேயிலை தூள், உப்பு, ஊதுவத்தி, ஆயில் போன்ற பொருட்கள் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். 3 லிட்டர் ஊற்ற வேண்டிய மண்ணெண்ணெய்யை 2 லிட்டர் தான் ஊற்றுகிறார்கள். மேலும், எங்களுக்கு பொருட்கள் இல்லை என கூறி விட்டு வெளியில் அதிக விலையில் விற்று வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர். இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறியதாவது:- கடைகளுக்கு வந்து சேர வேண்டிய பொருட்கள் அனைத்தும் வந்து விட்டது. ஆனால் அதன் பட்டியல் இணையத்தில் இல்லை. இதன் காரணமாக ரேசன் பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: