திருச்சி காட்டூரில் உள்ள யுடிசி கல்லூரியில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனே திரும்பப்பெற வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பறையை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சேதுபதி, மாநிலக்குழு உறுப்பினர் அருணாச்சலம், யுடிசி கல்லூரி கிளைத்தலைவர் தீன், செயலாளர் கோவிந்தராஜ் உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கட்டண உயர்வு ரத்து

பின்னர் மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் உடனடியாக தொலைபேசியில் பேசியதையடுத்து தேர்வு கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் கல்வி கட்டணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர், மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply