தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.தமிழக மக்களின் நலன் கருதியே இவ்விஷயத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் உயர் நீதிமன்றநீதிபதிகள் கூறியுள்ளனர்.

மலேசியாவில் இருந்து, தூத்துக்குடிதுறைமுகம் வாயிலாக 51 ஆயிரத்து856 டன் மணலை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதனை விற்பனைக்கு எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதி மறுப்பதாகவும், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம். எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.எம். ராமையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஆர்.மகாதேவன், “மத்திய அரசின் அனுமதிபெற்று இறக்குமதி செய்த மணலை விற்பனை செய்வதற்கு மனுதாரருக்கு தமிழக அரசு தற்காலிக உரிமம் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அத்துடன், தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும்; புதியமணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது, ஜல்லி குவாரி தவிர்த்து கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என்றும் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.தமிழகத்தின் இயற்கை வளம் கொள்ளை போவதைத் தடுக்கும் வகையில் இந்தஉத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும், தமிழக அரசு இதனை ஏற்றுச் செயல்படுத்தும் என்று நம்புவதாகவும் தீர்ப்பில் அவர்கூறியிருந்தார்.உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர்.

தமிழக அரசு இதற்கு எதிராக மேல்முறையீடு எதற்கும்செல்லக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.எனினும், இவற்றையெல்லாம் மீறி,மணல் குவாரிகளை மூடும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்களன்று மேல்முறையீடு செய்தனர்.

“வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மணலை விற்பதற்கு அனுமதி வழங்கவும், ஆரல்வாய்மொழி போலீசாரால் பறிமுதல் செய்த 96 டன் மணலையும், 6 லாரிகளையும் விடுவிக்கக் கோரியும்தான் மனுதாரர் எம்.ஆர். எம். ராமையா மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, 51 ஆயிரத்து 856 மெட்ரிக் டன் மணலை 15 நாளில் கேரள மாநிலத்துக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி கேட்டார்.

தமிழக கனிமவளச் சட்டத்தின் கீழ்உரிமம் பெறாமல் மணலை சேமித்து வைப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்; இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்; ஒவ்வொரு மாநிலத்திலும் கனிமங்களை பாதுகாக்க தனித்தனி சட்டங்கள் அமலில் உள்ளன; எனவே, அந்தச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்; இதனை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை; மேலும், மனுதாரர் உரிமம் மட்டுமே கேட்டு நீதிமன்றம் வந்துள்ளார்; ஆனால், இந்த கோரிக்கைக்கு மாறாக தனி நீதிபதி மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும், புதிய மணல் குவாரிகளை திறக்கக்கூடாது, கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அரசிடமோ, மணல் குவாரி குத்தகைதாரர்களிடமோ கருத்து கேட்கவில்லை. இதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிட்டார். “மணல் பற்றாக்குறை இருக்கும் நிலையில், அனைத்து மணல்குவாரிகளை மூட தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்; இதனால் அரசுத்தரப்பில் பணிகளும் மாநிலம் முழுவதும் பாதிக் கப்படும்; எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது; தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அவர் கோரினார்.

இதை கேட்ட நீதிபதிகள், தமிழக மக்களின் நலன் கருதித்தான் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்; எனவே, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கமுடியாது என்று மறுத்து விட்டனர். மேலும், மனுதாரர் தரப்பில் வாதிட கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கை டிசம்பர் 8-ஆம் தேதிக்கும் அவர்கள் ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: