மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சரத் யாதவையும், அன்வர் அலியையும் மாநிலங்களவைத் தலைவர் தகுதிநீக்கம் செய்திருப்பது உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டவசமாகும். 1985ஆம் ஆண்டு அரசமைப்பு (52ஆவது திருத்தச்) சட்டத்தின் கீழ், கட்சித் தாவல் என்னும் காரணங்களின் அடிப்படையில் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டதன் அடிப்படையில் இது செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இவ்வாறு தகுதிநீக்கம் செய்வதற்கு முன் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று 1985 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் (கட்சித் தாவல் அடிப்படையில் தகுதிநீக்கம்) விதிகள் வரையறுத்திருக்கிறது.

அவ்வாறு பரிசீலனை செய்யப்பட்டதன் அடிப்படையில் மாநிலங்களவைத் தலைவர் அதனைமுடிவு செய்திட வேண்டும். மேலும் மேற்படி விதியின் உட்பிரிவு 4இன்கீழ், இவ்வாறு தகுதிநீக்கம் செய்வதற்கான கோரிக்கை வரும்பட்சத்தில், மாநிலங்களவைத் தலைவர் அதனை பூர்வாங்க விசாரணைக்காகவும் அதன்மீது அறிக்கை தாக்கல் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அந்த விதியின் உட்பிரிவின்படி, தகுதிநீக்கம் செய்யக் கோரிய கடிதத்தை மாநிலங்களவையின் உரிமைக்குழுவிற்கு அனுப்பி அறிக்கை பெற்று அதன்மீதுதான் மாநிலங்களவைத் தலைவர் முடிவு எடுத்திருக்க வேண்டும்.

உரிமைக்குழுவின் உறுப்பினராக நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறேன் என்ற அடிப்படையில் இத்தகைய மனுக்கள் உரிமைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கையைப் பெற்றுத்தான் இதுவரை மாநிலங்களவைத் தலைவர் தன் அதிகாரத்தைத் தீர்மானித்திருக்கிறார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சரத் யாதவ், நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். தன் வாழ்நாளில் இதுவரை 11 தடவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுதிமொழி எடுத்திருக்கிறார். அவரது சீனியாரிட்டியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தை ஆய்வு செய்திட வேண்டும். மாநிலங்களவைத் தலைவர் தன்முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.