திருச்சி;
திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் இரண்டு மாத காலமாக முடங்கிக் கிடக்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை மற்றும் கூலி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத்தொழிலாளர்கள் புதனன்று உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடைவீதியிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஏ.கணேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். மாவட்டத் தலைவர் எஸ்.சந்திரன், ஏ.பழநிசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர். போராட்டத்தை தொடர்ந்து பிடிஓ அதிகாரி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

வருவாய் வட்டாட்சியர் சந்திரகுமார் தலைமையிலும், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலையிலும் சங்க தலைவர்கள் கலந்து கொன்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில், 15 நாட்களில் அனைவருக்கும் வேலை வழங்கவும், நூறு நாட்கள் முடியும் வரை தொடர்ந்து அனைத்து குடும்பங்களுக்கும் வேலை தருவது என தீர்மானிக்கப்பட்டது.

மாநிலப் பொதுச்செயலாளர் ( பொறுப்பு) வி.அமிர்தலிங்கம் பேச்சுவார்த்தை முடிவுகளை விளக்கிக்கூறி, போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.இப்போராட்டத்தில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பிச்சமுத்து, நிர்வாகிகள் எஸ், ராமர், செல்வி, கே.மீனா, ஆர்.திலகவதி, அகிலான்டாஸ்வரி, அமுதா, ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: