நவீன இந்திய வரலாற்றில் கறைபடிந்த நாளாக டிசம்பர் 6 ஆம் தேதியை ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் மாற்றி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. கரசேவகர்கள் என்று கூறிக்கொண்ட கலவரக் கும்பலால் 1992 ஆம் ஆண்டு டிசம்பர்6ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவராக இருந்த பழுத்த ஆன்மீகவாதியான சங்கர் தயாள் சர்மா இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று கண்டித்தார்.

இந்த கொடிய நிகழ்வுக்குப்பிறகு பாஜகவினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு காட்டுமிராண்டிக் கும்பல் என்றே அழைத்தார். காலத்தின் கோலத்தால் வாஜ்பாய் பிரதமரான நிலையில் இதுகுறித்து அவர் ஜோதிபாசுவிடம் வினவியபோது, இதைவிட மோசமானவார்த்தை அகராதியில் எனக்கு கிடைக்கவில்லைஎன்று நேருக்கு நேராக பதில் அளித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்ட நெடிய திட்டத்தின் ஒருபகுதியாகவே பாபர்மசூதி இடிப்புநிகழ்த்தப்பட்டது. மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதுமக்கள் கடும் வெறுப்பு கொண்டிருந்தனர். இதைமாற்ற ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. கலவரம் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதன் மூலம் தங்களின் இந்துத்துவா திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று உணர்ந்துகொண்ட நிலையில்தான் பாபர்மசூதி பிரச்சனையை ஆர்எஸ்எஸ் – பாஜக கையில் எடுத்தது. வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற முடிவெடுத்த நிலையில் பிராமணிய மேலாதிக்கத்தை- சாதிய அடுக்கை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்ட பாஜக ஆத்திரமடைந்தது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி திசை திருப்ப பாபர்மசூதி பிரச்சனையை விசிறிவிடத் துவங்கியது.பொய்மையை ஊதிப்பெரிதாக்கி, வெறியைத் தூண்டிவிட்டு இந்திய அரசியல் சாசனம், நீதித்துறை, நிர்வாகம் அனைத்திற்கும் சவால்விடும் வகையில் திட்டமிட்டபடி மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர். 25 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி உள்ளிட்ட யாரும் தண்டிக்கப்படவில்லை.

இதுகுறித்து விசாரிக்கப்பட்ட லிபரான் கமிஷன் பரிந்துரையும் நடைமுறைக்கு வரவில்லை.இன்னும் சொல்லப்போனால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட யாருக்குச் சொந்தம் என்ற தாவாக்கூட இன்னமும் முடிவுக்குவரவில்லை. கட்டப்பஞ்சாயத்துப்போல வேறு ஊரில் மசூதியை கட்டிக்கொள்ளலாம் என்று சிலர் பேசுவதும், நீதிமன்றமே அதை ஆமோதிப்பதும் வேடிக்கையானது. பெரும்பான்மை மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத்தைத்தொடர்ந்து சிறுபான்மை வகுப்புவாதமும் வளர்ந்துள்ளது. இதைத்தான் ஆர்எஸ்எஸ் பரிவாரம் விரும்புகிறது. ஆனால், இந்திய மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையுமே விரும்புகிறார்கள். மசூதி இடிப்பில் தொடர்புடைய அனைவரும்சட்டத்தின்முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்பதை சட்டத்தின் வழிநின்று தீர்க்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: