குலசேகரம்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்படுத்திய பேரழிவுப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஆயிரக்கணக்கான சிஐடியு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவ.30-ல் ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சிப்பாறை , தடிக்காரன் கோணம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ரப்பர் மற்றும் காட்டுமரங்கள் சாய்ந்து விழுந்து மலைக் கிராமங்களுக்கான பாதைகள் துண்டிக்கப்பட்டன. மின் இணைப்பும், போக்குவரத்தும் தடைபட்டதால் இப்பகுதி மக்களின் உணவு, தங்குமிடம் பிரச்சனைக்குள்ளாகி இருக்கிறது.

ஆலம்பாளை, மணலோடை, புறாவிளை, கீரிப்பாறை, பரளியாறு, வழையத்து வயல், தடிக்காரன் கோணம், தச்சமலை, தோட்டமலை, எட்டாம் குந்நு ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். நிவாரண உதவிகள் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மலைப்பகுதிகளுக்கு ரேசன் பொருட்கள் கூட கொண்டு செல்லப்படவில்லை.

செவ்வாயன்று (டிச.5) பேச்சிப்பாறை அணையிலிருந்து அக்கரையில் உள்ள தச்சமலைக்கு ரேசன் பொருட்களை கொண்டு செல்ல படகு கேட்டுக் கொண்டிருந்தார் விற்பனையாளர். அவரிடம் விசாரித்த போது 107 ரேசன் கார்டுகளுக்கு பகுதி நேர ரேசன் கடை தச்சமலையில் உள்ளதாக தெரிவித்தார். இவர்கள் அனைவரும் காணிக்காரர் என்கிற பழங்குடியினர் தச்சமலை அரசு தொடக்கப்பள்ளியில் தங்கியிருக்கும் இவர்கள் 4 நாட்களுக்கு மேல் வெளிஉலக தொடர்பே இல்லாமல் போதிய உணவுப் பொருட்களும் இல்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்தனர்.

தச்சமலையைச் சேர்ந்த மேரி கிறிஸ்டோபர் கூறுகையில், தச்சமலை, கலப்பாறை, பின்னமுட்டு தேரி, நடனம் பொற்றை ஆகிய குக்கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் பள்ளியில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு பால், பெரியவர்களுக்கு உணவு கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றார்.

நிவாரணப் பணியில் சிஐடியு
இந்நிலையில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கீரிப்பாறை நிவாரண முகாமில் உள்ள 200 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினர். இங்கு 40 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாட புத்தகங்கள், சான்றிதழ்கள் நாசமடைந்துள்ளதாக சிஐடியு தோட்டம் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வல்சகுமார் தெரிவித்தார். அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத அளவுக்கு பாதிப்பு நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று (டிச.6) சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் ஆலம்பாறை, மணலோடை, புறாவிளை ஆகிய நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அரிசி , சீனி, தேயிலை ஆகியவற்றையும், எல்ஐசி ஊழியர்கள் சார்பில் 500 போர்வைகள், 150 தார்பாய்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் எல்ஐசி ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.செண்பகம், சாமிநாதன், சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், செயலாளர் தங்கமோகன், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமணன், பொருளாளர் முத்தம் பெருமாள், தோட்டம் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மீட்புப் பணியில் டிஒய்எப்ஐ
குமரி மாவட்டத்தின் பசுமைக்கு காரணமான பல்வகை மரங்கள், பொருளாதார, மேம்பாட்டுக்கு உதவிய ரப்பர் என லட்சக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தும், முறிந்தும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளை நிறைத்தன. அவற்றை வெட்டி அகற்றினால் தான் மீட்பு-நிவாரணப் பணிகளை துவக்க முடியும் என்கிற நிலையில் நவம்பர் 30-ல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் ஸ்தம்பித்தது. அப்போது களம் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாவட்ட மக்களுடன் இணைந்து சகஜ நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெஜீஸ் குமார் கூறியதாவது; எங்கள் தோழர்கள் புயல் பாதிப்பு ஏற்பட்ட அந்த நிமிடமே அந்தந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் இறங்கினார்கள். காற்றும் மழையும் தொடர்ந்து கொண்டிருந்த போதே சாலையில் கிடந்த மரங்களை அகற்றத் தொடங்கினோம். காவல் துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் என கரம் கோர்த்து பணியாற்றினோம்.

வேர்க்கிளம்பிலிருந்து சாமியார் மடம் வரை உள்ள சாலையில் மாவட்ட துணை செயலாளர் ஜோஸ் மனோகர் தலைமையிலும், முழுக்கோட்டில் அனு தலைமையிலும், குலசேகரத்தில் ஷாஜி தலைமையிலும், இந்த பணிகள் நடைபெற்றன. தச்சமலையில் மாவட்ட தலைவர் ஜோயல், கிள்ளியூர் வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: