தினக் கூலி தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 10 நாட்கள் பிரச்சாரம் நடைபெறும் என்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்ற வாரிய தொழிலாளர் சங்க தலைவர் க.பீம்ராவ் கூறினார். வாரியத்தில் 20 அண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இத்தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று 2016ம் ஆண்டு மார்ச் 3ந் தேதி நிர்வாகம் உறுதிமொழி கடிதம் அளித்தது. அதனடிப்படையில் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. நிர்வாகம் உறுதி மொழி அளித்து 20 மாதமாகியும் தினக்கூலித் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் சிந்தாதரிப்பேட்டையில் உள்ள வாரிய தலைமையகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தையொட்டி சங்க நிர்வாகிகள், வாரிய மேலாண் இயக்குநர் சத்திய பிரத சாகூ-வை சந்தித்து மனு அளித்தனர். அதில், நிர்வாகம் ஒப்புக் கொண்டபடி தினக்கூலித் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 140 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்பட்டு வருகிறது. இத்தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 346 ரூபாய் கூலி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் களப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்,ஜெட்ராடு ஓட்டுநர்களை பணிநிரந்தரம் செய்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இருந்தன.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய க.பீம்ராவ், “உள்ளாட்சித்துறை, நிதித் துறை முதன்மைச் செயலாளர், உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைச் சந்தித்து மனு அளித்தும் 274 தினக்கூலித் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். 7வது ஊதியக்குழு குறைந்தபட்ச மாத ஊதியமாக 18ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ள நிலையில், மாநில அரசு 15 ஆயிரத்து 600 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. அதைக்கூடத் தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ளது. ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்து அரசு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கிறது” என்றார்.

“எனவே பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்களுக்கு மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். அதன் பின்னர் வேலைநிறுத்தம் நடைபெறும்” அவர் கூறினார்.இப்போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி, நிர்வாகிகள் சி.சத்தியநாதன், ஞானபிரகாஷ், சீனிவாசன், காசி உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: