பள்ளி மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோரது சாவு வழமையான செய்தி என்று கடந்து விடுவோமேயானால் இந்த செய்தி காலஇடைவெளிவிட்டுத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.இனியும் ஒரு குழந்தை படிப்பு ஏறவில்லை என்று மண்ணில் மடிவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இந்தப் பலிக்கு உடனடிப் பொறுப்பு யார்? என்று நகர்ந்துவிடாமல் இனி இதுபோன்றதொரு பலி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதுமட்டுமல்ல, இதுபோன்று இதற்கு முன் நடந்த பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அனைத்திற்கும் பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்பட்டவர்கள் ஆசிரியர்களே. இப்போது நடந்துள்ள மனதைப் பதைபதைக்க வைக்கும் நால்வரின் மரணத்திற்கும் குற்றம் சாட்டப்படுபவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே.

ஆசிரியர்கள் மட்டுமே சாவிற்குப் பொறுப்பானவர்கள் என்பது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது. கத்திக்குத் தான் தண்டனை என்று எந்த சட்டப் புத்தகத்தில் உள்ளது? நாம அடிச்சா திருப்பி அடிக்காத மூன்று பேரில் ஒருவராக இந்தச் சமூகம் ஆசிரியரை நிலைநிறுத்திய போக்கு எப்போது உருவாகியது? எந்தவிதத்திலும் நியாயப்படுத்தி விட முடியாத இளம்பிஞ்சுகள் மாய்ந்து போகக் காரணமாய் இருக்கும் இந்தத் தற்கொலையை மாணவ சமூகம் மட்டும் தான் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறது என்று இல்லை.இன்றைய ஆசிரிய சமூகமும் எதிர் நோக்கிக் கொண்டு தான் இருக்கிறது. உடலை மாய்த்துக் கொண்டல்ல; மானத்தை, கடமையை, பொறுப்பை மாய்த்துக் கொண்டு தினம் தினம் தற்கொலை செய்து கொண்டுதான் இருக்கிறது. தேர்வில் நூறுவிழுக்காடு பெற்றுத் தரமுடியாமல், முதன்மைக் கல்வி அதிகாரி முன்போ மாவட்டக் கல்வி அதிகாரி முன்போ கை கட்டி, வாய் பொத்தித் தலை கவிழ்ந்து, மானம் இழந்து பதில்கூற முடியாமல் நிற்கும் ஆசிரியரை நேரில் கண்டதுண்டா?

அற்றம் காக்கும் அறிவை வளர்ப்பதல்ல என் கடமை. மாணவர்களைத் தேர்வில் 35 மதிப்பெண் பெற வைப்பதே என் கடமை என்று முடமாகிப் போன ஆசிரியரின் உள்ளக் குமுறலை உங்களில் யாராவது கேட்டதுண்டா?

சமூக நீதியை வகுப்பறையிலிருந்து கொண்டு வர வேண்டிய ஆசிரியர் “டல் ஸ்டூடண்ட்”, “டாப்பர்” என மாணவனைப் பிரித்து வைத்துப்பயிற்சி அளிக்கும் பொறுப்பற்ற நிலைக்கு என்ன காரணம் ?குற்றம் எதற்குமே ஆசிரியர் பொறுப்பல்ல என்று நான் கூறவரவில்லை. ஆசிரியர் மட்டுமே பொறுப்பு என்று கூறுவதைத் தான் எதிர்க்கிறேன். மருத்துவமனையில் தன் இரத்த உறவை மருத்துவரின் உச்சபட்ச முயற்சிக்குப் பின்னும் இழக்க நேர்ந்தால் வரும் கோபத்தை அந்த மருத்துவர் மேலோ மருத்துவமனை மீதோ இந்தச் சமூகம் காட்டியபோது, மருத்துவமனையைக் காக்க உடனடியாக சட்டம் இயற்றியது அரசு. ஏன் ஆசிரியர்கள் விஷயத்தில் மட்டும் எதிர்மறையாக நடக்கிறது? மருத்துவத்தில் ஏற்படும் இழப்பிற்கு மருத்துவம் மட்டுமே காரணம் அல்ல. பல துணைக்காரணிகளும் உள்ளது என்பதை உணர முடிகிற அரசால், சமூகத்தால், ஏன் ஆசிரியர் மாணவர் விஷயத்தை ஏற்க முடியவில்லை? ஏனென்றால், மாணவர்களின் தற்கொலைக்கு சமூகத்தின் அங்கமான நாம் ஒவ்வொருவரும் காரணி. இது ஒரு சங்கிலித் தொடர்.

”ஐயா… அவன்பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. சனி, ஞாயிறு சிறப்புவகுப்பிற்கும் வருவதில்லை. இரவில் வேலைக்கும் போயிட்டு, பகலில் பள்ளிக்கும் வருகிறான். வீட்டில் ஏதோ பிரச்சனையாம். அதான் பாஸாகவில்லை”.”ஆமா, அவன் வீட்டுல பிரச்சனை இருக்கும், பள்ளிக்கு வரமாட்டான். படிக்க மாட்டான். அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. அவன் ஏன் பாஸாகல?, அதுக்குமட்டும் காரணம் சொல்லுங்க”.

இது ஆசிரியர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி நடக்கும் உரையாடல்தான். இதில் ஏன் அவனின் அறிவை வளர்க்கவில்லை? என்று ஒருபோதும் யாரும் கேட்டதில்லை. ஏன் பெயிலானான் என்பதே மேலிருந்து படிநிலையாகக் கீழிறங்கும் கேள்வியாகும். கல்வித்துறை இயக்குநர் இணை இயக்குநரிடமும், இணை இயக்குநர் முதன்மைக் கல்வி அதிகாரியிடமும், முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையாசிரியரிடமும், தலைமை ஆசிரியர் ஆசிரியரிடமும், ஆசிரியர் மாணவனிடமும் என இந்தக் கேள்வி இறங்கிக் கொண்டே இருக்கும்.

அத்தோடு நில்லாமல் பொதுத்தேர்வு முடிவின்போது இத்தனை மாணவர்கள் பெயிலா என்ன கல்வித்துறையின் செயல்பாடு இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பொது மக்கள் அமைச்சரிடமும், அமைச்சர் ஏன் பெயில் என இயக்குநரிடமும், இயக்குநர் மீண்டும் இணை இயக்குநரிடமும் என ஒரு சங்கிலி சுற்ற ஆரம்பிக்கும்.இந்த சங்கிலியின் இறுக்கம் தாங்க முடியாமல் ஒரு உடைப்பு ஏற்படுமே அதுதான் மாணவனின் தற்கொலை. இந்த உடைப்பில் மாணவனுக்கு முன் இருக்கிறவர் ஆசிரியர் என்ற முறையிலேயே தண்டனையை ஆசிரியரே ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். ஒவ்வொரு நிலையிலும் சங்கிலி இறுக்கப்பட்டதை எப்போது நாம் உணரப் போகிறோம். சரி, உங்கள் வாதப்படியே ஆசிரியர்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால், ஒன்று மட்டும் நிச்சயம். ஆசிரியர் ஏற்றுக் கொள்ளும் தண்டனையால் இந்த இறுக்கம் ஒரு போதும் குறையப் போவது இல்லை. இறுக்கம் தாங்காமல் உடைப்பு அப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இறுக்கம் குறையாமல் உடைப்பு நிற்கப் போவது இல்லை.

கல்லூரியில் மாணவன் தேர்வில் தோல்வி, அதனால் தற்கொலை, என்ற செய்தியை நாம் அதிகம் கேட்டதுண்டா? இருக்காது ஏனென்றால், அங்கே தேர்வில் தோல்வி என்பது பெயில் (தோல்வி) அல்ல; அரியர் ( பாக்கி). இனியாவது மாற்றம் என்பது ஆசிரியருக்குக் கொடுக்கப்படும் தண்டனையில் வேண்டுமா பள்ளிக் கூடப் பயிற்சி முறையில் வர வேண்டுமா இல்லை, அதனை எதிர் கொள்ளும் சமூகத்தில் வேண்டுமா என்பதை சிந்திப்போம். இனி ஒரு துயரும் நிகழாமல் தடுப்போம்.
– இ.கலைக்கோவன்,செயலாளர்
தேடல் திரைப்பட சங்கம்.தமுஎகச ஈரோடு கிளைப்பிரிவு
9944336007

Leave A Reply

%d bloggers like this: