தில்லி,

பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி பங்கேற்கவிருந்த ராமர் கோவில் குறித்த விவாத நிகழ்ச்சியை ரத்து செய்து ஜெஎன்யு நிர்வாகம் அறிவித்துள்ளது.

அயோதியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் ஆன நிலையில், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ராம ஜன்மபூமி இயக்கத்தின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஒன்று ஏபிவிபி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விவாத நிகழ்ச்சியில் ”ஏன் அயோதியாவில் ராமர் கோவில் அமைக்க வேண்டும்?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற பாஜக எம்.பி., சுப்பிரமனியன்சுவாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதே போல பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதியில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சியில் ”குடியரசை மீளப்பெறுதல் : கலாச்சாரம், அரசியலமைப்பின் அறநெறி மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பதற்காக” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி இன்று நடக்கவிருந்த பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்கும் விவாத நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்தது. அதே சமயம் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது. ஆனால் அதன் பின்னர் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பிரகாஷ் காரத் நிகழ்ச்சியையும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைழகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஜேஎன்யு மாணவர் தேர்தலில் போட்டியிட்ட ஜேஎன்யு-வின் யோகி என்றழைக்கப்படும் மிஷ்ரா கூறியிருப்பதாவது, நாங்கள் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு அழைப்பு விடுத்து, அவரது வருகை உறுதி படுத்திய போது எந்த பிரச்சனையும் இல்லை. திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் தனது ராமருக்கு எதிரான, இந்துவுக்கு எதிரான முகத்தை காட்டுகிறது. இதுவே நிவேதித்தா மேனன் ஆக இருந்திருந்தால், இது போல் நடந்திருக்காது. நாங்கள் எங்களை ஜெஎன்யு-வின் ஹிந்து மாணவர் அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கமான ராமர் குறித்து பேச இது ஒரு முதல் முயற்சி. இதே உணர்வு உள்ள மாணவர்களை எங்கள் அமைப்பின் கீழ் ஒன்று திரட்டி சிறப்பாக செயல்பட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்க தலைவர் சபானா அலி கூறுகையில், அயோதியா குறித்து விவாதிப்பது நியாயமானது என்ற கேள்விக்கு இங்கு இடமே இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பின் ஏற்பட்ட வன்முறைகளை நம்மால் மறக்க முடியாது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் சரியான முடிவையே எடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: