இறந்த ஜுனைத் குடும்பத்திற்கு அரசின் சார்பில் அறிவித்த இழப்பீட்டை உடனே வழங்கிட வேண்டும் என்றுவலியுறுத்தி, ஹரியானா மாநில முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார்.கடிதம் வருமாறு: 2017 ஜூன் 22 அன்று மதவெறியர்களால் ரயிலில் தாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்ட இளைஞன் ஜூனைத்தின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று நீங்கள்அறிவித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. அவருடைய இரு சகோதரர்களும் அந்த சம்பவத்தின்போது தாக்கப்பட்டு, காயங்கள் அடைந்தனர். இவர்களில் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இதுநாள்வரையில் அவரால் வேறெந்த வேலையும் செய்ய முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான இழப்பீட்டுத் தொகையும் ஜுனைத் குடும்பத்திற்கு இதுவரை போய்ச்சேரவில்லை. மாவட்ட ஆட்சியர் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து பெற்றிட்ட ஐந்து லட்ச ரூபாயை அளித்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது, பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது தொடர்பாக முதலமைச்சரிடமிருந்து எவ்விதமான உத்தரவும் வரவில்லை என்று கூறினார்.தாங்கள் அறிவித்தபடி இறந்த ஜுனைத் குடும்பத்திற்கு இழப்பீட்டை வழங்க வேண்டியது இந்த சமயத்தில் பொருத்தமுடையதாகவும், நியாயமானதாகவும் இருந்திடும்.”இவ்வாறு பிருந்தாகாரத் கடிதம் எழுதியுள்ளார்.(ந.நி.)

Leave A Reply