காஞ்சிபுரத்தில் அறிவிக்கப் பட்டுக் கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுப் பூங்கா திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா 2010ல் அறிவிக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அது இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது, இந்த பட்டுப் பூங்காவை அரசு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக கைத்தறி நெசவாளர்கள், சாயப்பட்டறை நடத்துபவர்கள் என ஜவுளித்துறையைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெசவுத் தொழிலுக்கான ஜி.எஸ்.டி வரிவிதிப்பை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீருக்கு ஆதாரமாகப் பாலாறு உள்ளது. இந்த பாலாற்றைச் சுற்றி நீராதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஏரி குளங்களை சீரமைத் திட நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுக் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இவற்றைச் சரி செய்கிறேன் என்ற பெயரில் அரசு மழைக் காலங்களில் தான் நடவடிக்கை எடுக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மற்ற நாட்களில் செய்யவேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லை. குறிப்பாக தலைக்காயத்திற்கான அறுவை சிகிச்சை மருத்துவ வசதியை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றார்.இச்சந்திப்பின் போது மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், எஸ்.கண்ணன், மாவட்டச் செயலர் இ.சங்கர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: