ஒக்கி புயலால் பாதிக்கப் பட்டு காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கக் கடற்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒக்கி புயலின்போது கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும்,மீனவர்களை இழந்த குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் எல்.ட்டி.ஏ.பீட்டர்ராயன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக செவ்வாயன்று (டிச. 5) விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல் படை, கப்பற்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உறைவிடம், மருந்து ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயற்கை சீற்றங்களின் போது அரசின் மீட்பு நடவடிக்கையை குறை கூறு வது சரியல்ல. இயற்கை சீற்றங்களின் பதிப்புகளில் நீதிமன்றம் இழப்பை நிர்ணயிக்க முடியாது. மீனவர் மட்டுமல்லாமல், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் மறுவாழ்வுக்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் கெடுவாய்ப்பான இந்த புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தங்களது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: