உதகை, டிச. 6 –
உதகை மற்றும் திருப்பூர் உலக மண்வள நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டிசம்பர் 5ம் தேதி உலக மண்வள தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் பாக்ட் உர நிறுவனம் இணைந்து உலக மண்வள தின விழாவை அனுசரித்தது. உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை தகவல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தோட்டக்கலை இணை இயக்குநர் (பொ) சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தலைமை வகித்தார். இதில் பணமில்லா இயற்கை விவசாயம் குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய போராசிரியர் கா.ராமமூர்த்தி, மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் ஜீ.கே. உமாராணி, விவசாயத்தில் பாக்ட் உர நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து கோவை மண்டல மேலாளர் சு.சுருளிராஜன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

மேலும், மண் ஆய்வு மற்றும் சத்துக்களின் மேலாண்மை குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) மண் ஆய்வு கூடம் கு.சுரேஷ், ஒருங்கிணைந்து உர மேலாண்மை குறித்து வேளாண்மை அலுவலர் (உரக்கட்டுப்பாடு ஆய்வகம்) க.அன்பழகி ஆகியோரும் உரையாற்றினர். முடிவில், வேளாண்மை அலுவலர் (மண் ஆய்வு கூடம்) சா.நிர்மலாதேவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:
இதேபோல், திருப்பூர் மாவட்டம், மூலனூர் நத்தபாளையம் கிராமத்தில் ஜே.கே.கே. வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடையே மண்வளம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரசாயன உரம், பூச்சிகொல்லிகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றின் பக்க விளைவுகள் பற்றி எடுத்துரைத்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தை காக்குமாறு தெரிவித்தனர். இதில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: