சென்னை;
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்குப் பின்னால் கடுமையான நிர்ப்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து போவது, ஜனநாயகத்திற்கு கேடு என்றும் விமர்சித்துள்ளன.

ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான வேட்புமனு பரிசீலனை நேற்று நடைப்பெற்றது. அப்போது, 7 பெண்கள் உட்பட 145 பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் தினகரன் உள்ளிட்ட 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. நடிகர் விஷால், தீபா உள்ளிட்ட 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.விஷாலை முன்மொழிந்து அவரது மனுவில் 10 பேர் கையெழுத்திட்டிருந்த நிலையில், அவர்களில் 2 பேர், திடீரென தாங்கள் விஷாலை முன்மொழியவில்லை என்று கூறியதன் அடிப்படையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக மாலை 4 மணியளவில் தேர்தல் அலுவலர் வேலுசாமி தெரிவித்தார்.

இதை எதிர்த்து, நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை, காவல்துறையினர் மண்டல அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று தேர்தல் அலுவலருடன் பேச வைத்தனர்.அப்போது, தன்னை முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரை அதிமுக வேட்பாளர் இ. மதுசூதனனின் ஆதரவாளர்கள் மிரட்டியது தொடர்பான தொலைபேசி ஆதாரம் ஒன்றை மாலை 6 மணிக்கு மேல் விஷால் வெளியிட்டார்.இதையடுத்து விஷாலின் மனு இரண்டாவது முறையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட ஆய்வுக்குப் பிறகு உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது உறுதியானது.

ஆனால், அன்றிரவு 11.15 மணியளவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக, இரண்டு பக்க அறிக்கை மூலம் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
“விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனு பரிசீலனையின்போது, அவரது வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகிய இருவரும் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் தெரிவித்தனர்; மாலையில் சில ஆடியோ ஆதாரங்களை விஷால் வழங்கினார்.

அதில், சுமதி என்பவர் யாரோ சிலரின் அழுத்தத்தின் பேரிலேயே தேர்தல் அலுவலர் முன்பு ஆஜராகி அவ்வாறு கூறியதாக பதிவாகியிருந்தது; இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்தோம்; இதனடிப்படையில் சுமதியும், தீபனும் மீண்டும் ஆஜராகினர்; அப்போது, விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என்று தெரிவித்தனர்; விஷால் தரப்பில் ஆடியோ ஆதாரம் மட்டுமே வழங்கப்பட்டது; அதைவைத்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை; எனவே வேட்புமனுவை நிராகரித்தோம்” என்று கூறியிருந்தார்.நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது, அதிமுக வேட்பாளர் இ. மதுசூதனன், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடியாக மாறும்; இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்கு விஷாலுக்கு போகும் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. விஷால் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் பாஜக – அதிமுக கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும், நடிகர் சங்கத்தினர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை விஷாலுக்கு எதிராக தற்போது தூண்டிவிட்டு போராட்டம் நடத்தச் செய்வது கூட அவர்கள்தான் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த பின்னணியில் நடிகர் விஷாலின் மனு முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 11 மணிக்கு மேல் திடீரென தள்ளுபடி செய்யப்பட்டது சந்தேகத்தைக் கிளம்பியது.முன்னதாக விஷாலை முன்மொழிந்த வேலு என்பவர், தன்னை மதுசூதனன் ஆட்கள் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக தெரிவித்தது, அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது.இந்நிலையில், நடிகர் விஷாலின் வேட்புமனு தள்ளுபடி பின்னணியில் நிர்ப்பந்தம் இருப்பதாக திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மு.க. ஸ்டாலின்
ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலர் நடந்து கொள்வதை பார்க்கும் போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமானால், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்; விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சு. திருநாவுக்கரசர்
நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.மேலும், தங்களை எதிர்ப்பவர்களை, ஆட்சி அதிகாரம், காவல் துறையை கொண்டு அடக்க நினைத்தால் அது தவறானது என்று கூறியுள்ள அவர், வாட்ஸ்-அப்பில் விஷால் வெளியிட்ட உரையாடல் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

இரா. முத்தரசன்
நடிகர் விஷால் வேட்பு மனு பிரச்சனையில் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், “இவ்விஷயத்தில் யாரோ நிர்ப்பந்தம் செய்துள்ளனர். அதனால் தான் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். “தேர்தல் ஆணையம் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்; இதே நிலைமை நீடித்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

தொல். திருமாவளவன்
“விஷாலின் மனு இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டது எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை; அவரின் மனுவை நிராகரிக்க வேண்டிய அவசரம் ஏன்? அந்த அவசரத்துக்கான காரணம் என்ன?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை மீண்டும் ரத்துசெய்வதற்கு சதி நடக்கிறதோ என்ற ஐயம் எழுவதாகவும் கூறியுள்ள திருமாவளவன், தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை குலைக்கும் வகையில், விதிமுறைகளுக்கு முரணாக நடந்து கொண்டுள்ள தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

விஷால் புகார்
இதனிடையே, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் மனு அளித்திருக்கிறார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பற்றியும், வேட்புமனு பரிசீலனையின் போது நடந்த நிகழ்வுகள் பற்றியும் அந்த மனுவில் விளக்கியுள்ள விஷால், வேட்பு மனு விவகாரத்தில் தன்னிடம் மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இவ்விஷயத்தில் அடுத்ததாக ஆளுநரைச் சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ள விஷால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியிடமும் இவ்விஷயம் தொடர்பாக டவிட்டர் மூலம் முறையிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: