கோவை, டிச. 6-
கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கும் மாநகர காவல் துறையை கண்டித்து புதனன்று காவல் ஆணையர் அலுவலகத்தை ஆதிதமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீதிமன்றம் முன்பாக சிலை அமைக்கலாம் என கடந்த 2009 ஆம் ஆண்டு கோவை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், போக்குவரத்தை காரணம் காட்டி கோவை மாநகர காவல் துறையை கடந்த பத்து ஆண்டுகளாக அனுமதி மறுத்து வருகிறது. இந்நிலையில் அம்பேத்கர் நினைவு நாளான புதனன்று அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி மறுத்த காவல்துறை கண்டித்தும், காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டவாறு கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த ஆதி தமிழர் கட்சியினர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநகராட்சி அனுமதி அளித்தும், பத்து ஆண்டுகளாக டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுத்து வந்த காவல்துறையினர், தற்போது நகரின் முக்கிய சாலையான அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலை வைக்க மட்டும் அனுமதி அளித்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும, கோவை மாநகர காவல்துறை தீண்டாமை மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதேபோல், அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்கக்கோரி சமூக நீதிக்கட்சியினர் கோவை நீதிமன்றம் முன்பு அம்பேத்கர் உருவப்படம் அணிந்து சிலைபோல் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.