திருப்பூர், டிச. 6 –
மேட்டூர் இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்த் திட்டத்தில் அமைச்சர் தொகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பிற தொகுதிகளில் விவசாயப் பாசனத்துக்கு கைவிரித்துவிட்டனர் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கச் செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 45,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேட்டூர் இடதுகரை, வலதுகரை கால்வாய்த் திட்டத்தில் ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயப் பாசனம் நடைபெறுகிறது. குறிப்பாக முதலமைச்சர் பழனிச்சாமியின் எடப்பாடி தொகுதியும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தொகுதியும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியின் தொகுதியும் இப்பாசனத்தால் வளம் பெறுகிறது. காவிரி வடிநிலத்தில் உள்ள இப்பாசனத்திற்கு கடந்த ஆண்டு உயிர் தண்ணீர் விடப்பட்டது.

நடப்பு ஆண்டில் விடப்பட்ட உயிர் தண்ணீர் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதற்குப்பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாய்ந்து வருகிறது. அந்தப் பாசனப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தண்ணீர் திறப்பு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனமும், காவிரி வடிநிலத்தில்தான் உள்ளது. இப்பாசனத்தில் ஒற்றைப்படை எண் மதகுகள் கொண்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு கடந்த ஆண்டு உயிர்த்தண்ணீர் கூட விடப்படவில்லை. நடப்பு ஆண்டில் உயிர்த் தண்ணீர், உரிமை நீர் என எதுவும் திறக்கப்படவில்லை. இப்பகுதி வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப் போய்விட்டன, இருக்கும் தென்னைகளும் காய்ப்பின்றி இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் குடிப்பதற்குகூட நீர்இல்லை. கீழ்பவானி பாசனப் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினரும் பாசனப்பகுதி உரிமையை பெற்றுத்தரத் தவறிவிட்டார்கள்.

அமைச்சர் தொகுதி பாசனத்திற்கு ஒரு நீதி, அமைச்சர் அல்லாதவர்களை உறுப்பினர்களாகப் பெற்றிருக்கும் தொகுதிகளுக்கு ஒரு நீதி என்பது சமநீதி ஆகாது. இந்த நீர் நிர்வாகம் விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலானது. காவிரி இறுதி தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பவைகளுக்கு முற்றிலும் முரணானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply