கோவை, டிச. 6-
கோவையில் கடந்த ஒராண்டில் மட்டும் காட்டு யானை தாக்குதலில் 17 பேர் பலியாகி உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வனப்பகுதியில் தொடர்ந்து நடைபெறும் ஆக்கிரமிப்பு மற்றும் உணவு, தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக காட்டுயானைகளின் ஊடுருவல் அதிகமாகியுள்ளது. வனத்துறையின் ஆய்வின்படி கோவையில் கடந்த ஓராண்டில் 1806 முறை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும், யானைகளின் தாக்குதல்களில் இந்த ஓராண்டில் மட்டும் 17பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் படுகாயமடைந்துள்ளனர். வனவிலங்குகளின் ஊடுருவலை தடுக்க போதிய உபகரணங்கள் வனத்துறையினரிடம் இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என வனத்துறையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகமாகி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அச்சுறுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக உயிர் பலிகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. இதனையடுத்து வன எல்லையோர 45 கிராமங்களில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 இதற்கிடையே, யானை ஊடுருவல், மனிதர்கள் மீதான வனவிலங்குகள் தாக்குதல், பயிர்சேதம் ஆகியவை குறித்து வனத்துறையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து கள ஆய்வில் மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடந்த சம்பவங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்த ஓராண்டில் மட்டும் கோவையில் 1,806 முறையானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதில் 1,667 முறை ஆபத்தான நிலையில் யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டுள்ளன. அதுவும், போளூவாம்பட்டி சரகத்தில் தேவராயபுரம், மேட்டுப்பாளையம் சரகத்தில் ஹுலிகல், கல்லார், சிறுமுகை சரகத்தில் ஓடந்துறை, பெத்திக்குட்டை ஆகிய பகுதிகளே அதிக ஊடுருவல் பகுதிகளாக அறியப்பட்டுள்ளன. இவ்வாறு யானைகள் ஊடுருவலின்போது மனிதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகளவில் நடந்துள்ளன. இதில் கோவையில் 17 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் வன எல்லைக்குள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், கோவையில் 779 முறை யானை ஊடுருவல் சம்பவங்களால் பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் மேட்டுப்பாளையம் சரகத்தில் மட்டும் அதிகபட்சமாக 626 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்தபடியாக நெல்லிமலை, பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களே பயிர்சேதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் வாழை பயிரிட்ட விவசாயிகளே 45 சதவீத இழப்பை சந்தித்துள்ளனர். இதற்கடுத்து கரும்பு(21 சதவீதம்), சோளம் (15.7 சதவீதம்) பயிர்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சேதமடைந்த விளைநிலத்தை கணக்கிட்டு கடந்த 12 மாதத்தில் ரூ.47 லட்சம்பயிர் இழப்பீடும், பொருள் இழப்பீடாக ரூ.7.7 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வன எல்லையோர கிராமங்களில் யானைகள் விரும்பக்கூடிய பயிர்களை தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊடுருவலினால் ஏற்பட்ட பாதிப்பால் 22 யானைகள் பலியாகியுள்ளன. அதில் சிறுமுகை வனச்சரகத்தில் அதிகபட்சமாக 12 யானைகள் பலியாகியுள்ளது. ஒற்றை யானைகளை விட கூட்டமாக வரும் யானைகளே அதிகளவில் கிராமங்களுக்கு ஊடுருவி சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை காட்டுப்பகுதிக்குள் விரட்டுவது சிரமமாக இருக்கிறது. குறிப்பாக, ஆட்கள் மற்றும் பட்டாசு பற்றாக்குறையால் யானைகளை விரட்டுவது சிரமத்தையேஏற்படுத்துகிறது.

மேட்டுப்பாளையம் – சத்தி சாலை, கோவை – பாலக்காடு சாலை, மருதமலை சாலை ஆகிய 3 சாலைகளே யானைகள் அதிகம் கடக்கும் சாலைகளாக உள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply