டிசம்பர் 6 ஆம் தேதியை கறுப்புதினமாக கடைபிடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விட்டுள்ளன.

ஆண்டுகள் 25 உருண்டோடி விட்டன. 1992 டிசம்பர் 6 ல்தான் அந்த அக்கிரமம் நடந்தேறியது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான வெறியூட்டப்பட்ட கர சேவகர்கள் 500 ஆண்டுகள் பழமையான பாப்ரி மசூதியை தகர்த்து தடைமட்டமாக்கினர். தடுக்க வேண்டிய மாநில அரசு துணை நின்றது. மத்திய அரசோ வேடிக்கை பார்த்தது. அதற்குப் பின்னர் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. ஒரு தடவை சங் பரிவாரத்தைச் சார்ந்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், தற்பொழுது பா.ஜ.க தனி பெரும்பான்மையுடனும் ஆட்சிப் பொறுப்பேற்றன. பெரும்பாலான மாநிலங்கள் தற்போது பா.ஜ.க. ஆட்சியில். ஏராளமான வகுப்பு வெறிக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. பல ஆயிரம் அப்பாவி உயிர்கள் வகுப்பு வெறியாட்டத்துக்கு இரையாயின. இந்நிலையில் பாப்ரி மசூதியோடு பிரச்சனை நின்று விடவில்லை. தற்போது அதன் நீட்சி தாஜ்மகால் நோக்கியும் நகர்கிறது. இந்நிலையில் பாப்ரி மசூதி பிரச்சனையின் பரிணாம வளர்ச்சியைச் சற்று திரும்பிப்பார்க்கலாம்.

ஆனால் அப்போது முஸ்லீம்களுக்கும், நாகா சாதுக்களும் இடையில் ஒரு தாவா இருந்தது. 1855 ல் இந்த தாவா முன்னுக்கு வந்தது. முஸ்லீம்கள் தரப்பில் அயோத்தியில் இருந்த அனுமான் கார்ஹி எனும் கோயில் பள்ளி வாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது அப்பகுதி நவாப் வாஜித் ஷா என்பவரது ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த தாவாவின் பேரில் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் இறந்தனர். இந்த தாவாவை எதிர் கொள்வதற்காகவே பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராம் சாபுத்ரா ஒன்று இருந்தது என்ற எதிர்வாதம் வைக்கப்பட்டது. அப்போதும் ராம் ஜென்மஸ்தான் என்று கூறப்படவில்லை.

1857ல் பாப்ரி மசூதிக்கு எதிரே இருந்த மேடு போன்ற இடம் ராம் சாபுத்ரா என்றும், அதுவே ராம் ஜென்மஸ்தான் என்றும் ஒரு சாமியாரால் கூறப்பட்டது. உடனே அந்த மேடு ராம் சாபுத்ரா என்ற பெயரில் உயர்த்தப்பட்டு, பூஜைகள் செய்யத் துவங்கினர். இந்நிலையில் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஆங்கிலேயர்கள் 1859ல் இரண்டு இடங்களுக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்டினர். 1883 மே மாதத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அது வெற்றி பெறவில்லை. பின்னர் பைசாபாத் துணை ஆணையரிடம் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி தரப்படவில்லை. 1885 ல் மகந்த் ரகுபர்தாஸ் எனும் பூசாரி ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட அனுமதி கேட்கிறார். அந்த மனு மத்திய அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அவரால் தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து பைசாபாத் சிவில் நீதிபதி முன்னர் 1885 ல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்னர் ஆவாத் பகுதி நீதித் துறை ஆணையர் முன்னர் மேல் முறையீடு செய்யப்படுகிறது. அதுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்குகளிலெல்லாம் பாப்ரி மசூதி என்றும்,ராம் சாபுத்ரா என்றும் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடரப்பட்டதே ஒழிய ராம் ஜென்மஸ்தான் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

1934 ல் பாப்ரி மசூதி குறித்த ஒரு தாவா எழுந்தது. இது சன்னி முஸ்லீம்களுக்கு சொந்தமா அல்லது ஷியா முஸ்லீம்களுக்குச் சொந்தமா என்பதே அந்த தாவா. அதில் நீதிமன்றம் சன்னி முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. பாப்ரி மசூதியில் தொடர்ந்து தொழுகை நடந்து வந்தது. ஆனால் இரவு மற்றும் அதிகாலை தொழுகைக்காக முஸ்லீம்கள் பாப்ரி மசூதிக்கு வந்த போது இந்து வகுப்புவாத வெறியர்கள் சிலர் கற்களை வீசி தாக்கத் துவங்கினர். ஆனால் தொழுகை தொடர்ந்தது. 1949 ல் பைசாபாத் எஸ்.பி.யாக இருந்த கிர்பால் சிங் மாவட்ட நீதிபதி கே.கே நய்யாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் பாப்ரி மசூதிக்குள் சிலை வைக்க சிலர் திட்டமிட்டு வருவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தார். அந்த கடிதத்துக்கு நய்யாரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் எஸ்.பி. 1949 நவம்பர் 29 ல் மேலும் ஒரு கடிதத்தை எழுதினார். அதில் பள்ளி வாசலை ஒட்டி ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் அந்த கடிதங்கள் அனைத்தும் 2010 செப்டம்பர் 30 அலகாபாத் தீர்ப்பில் குறிப்பிட்ட பின்னரே வெளி உலகுக்கு தெரிய வந்தது.

1949 டிசம்பர் 22 நள்ளிரவில் பள்ளி வாசலுக்குள் சிலை வைக்கப்பட்டது. அதை அறிந்த உடனேயே மாவட்ட மாஜிஸ்திரேட் கே.கே.நய்யார் பாப்ரி மசூதியைக் கைப்பற்றி, கதவுகளைப் பூட்டி சீல் வைத்தார். பள்ளி வாசலுக்குள் சிலையைக் கொண்டு சென்று வைத்த போது அங்கே காவலுக்கு நின்றிருந்த பி.ஏ.சி. காவல்படையினர் அதைத் தடுக்கவில்லை. சிலைகளை அகற்றவும் இல்லை. அதை அறிந்த பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்திற்கு ஒரு தந்தியை அனுப்பினார். அவரது உத்தரவின் பேரில் மத்திய முதன்மைச் செயலாளர் பகவான் ஷா 1949 டிசம்பர் 27 ல் ஏன் சிலைகள் வைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிலைகளை ஏன் அகற்றவில்லை என்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் நய்யாரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு நய்யார் முஸ்லீம்களிடம் பேசி அந்த பள்ளிவாசலை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்யலாம் என்று விளக்கம் அளித்தார். அதற்காக 15 முஸ்லீம் பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவையும் அமைத்தார். இதிலிருந்தே மாவட்ட நிர்வாகமும், அன்றைய மாநில அரசும் எப்படி இத்தகைய இழி செயலுக்குத் துணை நின்றது என்பது புலனாகிறது. முஸ்லீம்கள் கவர்னர் ஜெனரல் ராஜாஜியிடம் முறையிட்டனர். முஸ்லீம்கள் கொடுத்த நெருக்கடியால் மாநில அரசின் செயலாளர் மீண்டும் கே.கே.நய்யாருக்கு சிலைகளை அகற்றும்படி உத்தரவிடுகிறார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு இயந்திரத்தின் ஒத்துழைப்புடனேயே இந்த அநீதி வகுப்புவாதிகளால் அரங்கேற்றப்பட்டதை உணர முடியும்.

1949 டிசம்பர் 23 ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ப்படுகிறது. குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்த இராம்தாஸ், சுக்லதாஸ், சுதர்சனதாஸ், பகவான் சாமச்சந்திர பாரமஹம்ஸ் உட்பட 60 பேர் மீது வழக்கு தொடரப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வழக்கு குறித்த வாக்கு மூலங்களை பதிவு செய்த நீதிபதி டி.யோக்கி நந்தன் அகர்வால் பின்னர் லிபரான் கமிஷன் முன்னர் அது ஒரு கோயில் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது. அத்வானியோ லிபரான் கமிஷன் முன்னர் சாட்சியமளித்தபோது ராமர் சிலைகள் தானாகவே தோன்றியதாகப் பொய்யுரைத்தார். ஆனால் சிலையை வைத்தவர்களோ தாங்களே வைத்ததாக இறுமாப்புடன் சாட்சியளித்தனர். 1949 டிசம்பர் 29 ல் பாப்ரி மசூதி அரசு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் சிலைகளை அகற்றவில்லை. ஆனால் பூஜையை அனுமதித்தார். பைஜாபாத் நீதிமன்றத்தில் கோபால்சிங் விஷாரத் என்பவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் சிலைகளை அகற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

1986 பிப்ரவரி முதல் நாள் பைசாபாத் நீதிபதியாக இருந்த கே.எம்.பாண்டே முன்னர் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவின் பேரில் அவர் பூட்டை திறக்க உத்தரவிடுகிறார். அதன் பின்னர் அங்கு வழிபாடு தொடரவும், அதில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில் உயர்நீதிமன்றம் தொடர்ந்து வழிபாடு செய்ய அனுமதித்து உத்தரவிட்டது. 1989 நவம்பர் 9 ல் அங்கு ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அலகாபாத் உயர் நீதிமன்றம் அடிக்கல் நாட்டுமிடம் சர்ச்சைக்குரிய இடம் என்றும், அதில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்று தடை விதித்தும் அடிக்கல் நாட்டுவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது பிரதமராக ராஜிவ் காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 ல் அத்வானி தலைமையில் மதவெறியூட்டும் பாதயாத்திரை அயோத்தி நோக்கி சென்றது. பிரதமராக வி.பி.சிங்கும், மாநில முதல்வராக முலாயம் சிங்கும் இருந்தனர். அத்வானி பீகார் எல்லையில் சமஸ்டிபூரில் வைத்து பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். பாப்ரி மசூதிக்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல் முலாயம் சிங் அரசு பாதுகாத்தது. இதைக் காரணமாக வைத்து வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

1991 ல் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி வந்தது. உத்தரப்பிரதேசத்தில் 32 சதவிகித வாக்குகள் பெற்று கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி வந்தது. பதவியேற்ற மறுநாள் அவர் அயோத்தி சென்று கோயில் கட்டுவதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.1991 ல் நரசிம்மராவ் அரசு வழிபாடு தலங்கள் குறித்த ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி 15.08.1947 ல் இருந்த வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்க வேண்டுமென்றும், அதில் எவ்வித மாற்றமும் யாரும் செய்யக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அச்சட்டம் பாப்ரி மசூதிக்குப் பொருந்தாது என்று கூறியது. இது வகுப்புவாதிகளின் செயலுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.

1991 அக்டோபர் மாதம் கல்யாண் சிங் அரசு பாப்ரி மசூதியைச் சுற்றியுள்ள 2.774 ஏக்கர் நிலத்தைக் கைவசப்படுத்தியது. 1991 அக்டோபர் 25 ல் அதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் கையகப்படுத்திய இடத்தில் நிரந்தர கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும், கட்டுமானப்பணிகளை நிறுத்தவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்ற 1991 அக்டோபர் 22 க்குப் பின்னர் தான் பிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆதரவாக இருந்த உயர் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் பின்னர் பா.ஜ.க.வால் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு, அவர்களது சட்டமீறலுக்கு கைமாறு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1992 மார்ச்சில் கல்யாண்சிங் அரசு மசூதியை சுற்றியுள்ள 42 ஏக்கர் நிலத்தை இராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு குத்தகைக்கு விட்டது. 1992 ஏப்ரல் 7ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் அயோத்தியில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்து, அங்கு அப்பட்டமாக நீதிமன்ற ஆணைகள் மீறப்படுவதாக அறிக்கை கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1992 ஜுலை 9ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் பாப்ரி மசூதி வளாகத்திற்குள் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. ஆனால் அதுவும் புறக்கணிக்கப்பட்டது.

1992 ஜுலை 23ல் கல்யாண்சிங் உச்சநீதிமன்றத்தில் தான் நிபந்தனைகளின்றி உச்சநீதிமன்றத்தின் ஆணைகளுக்கு அடிபணிவதாக கூறினார். இந்நிலையில் பிரதமர் நரசிம்மராவ் ஜுலை 22 ல் சாதுக்களை அழைத்து கரசேவையை நிறுத்துமாறும், 4 மாதங்களில் தான் மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதாகவும் உறுதி கூறினார். பின்னர் நரசிம்மராவ் நாடாளுமன்றத்தில் பாப்ரி மசூதி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்போவதாகவும், பாப்ரி மசூதி கட்டப்படுவதற்காக அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா என்ற வினாவிற்கு தீர்வு காணக் கூறப் போவதாகவும் கூறினார். 1992 அக்டோபர் 30, 31 தேதிகளில் வி.எச்.பி. சாதுக்களின் கூட்டத்தைக் கூட்டி 1992 டிசம்பர் 6 ல் கரசேவை துவங்கும் என்று அறிவித்தது. 1992 நவம்பரில் உச்சநீதிமன்றம் அங்கு எந்த பணியும் நடக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

உ.பி மாநில பா.ஜ.க. தலைவர் உச்சநீதிமன்றத்தில் கரசேவை சிம்பாலிக்காகவே இருக்கும் என்றும், கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே நடக்கும் என்றார். ஆனால் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் கீர்த்தனை பாட கரசேவகர்கள் வரவில்லை, கோயில் கட்டவே வருகின்றனர் என்றனர். 1992 நவம்பர் 23 ல் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாப்ரி மசூதியைப் பாதுகாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அங்கீகரிப்பதாகவும், எல்லாவித அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு தருவதாகவும் ஒத்துக் கொண்டன. அங்கு கரசேவையை ஆதரித்துப் பேசிய ஜெயலலிதாவும் இறுதித் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார். வழக்கறிஞர் ஓ.பி.ஷர்மா நீதிமன்றத்தில் இவர்கள் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நம்ப இயலாது என்றும், அவர்கள் அதைத் திட்டமிட்டு மீறுவர் என்றும் உச்சநீதிமன்றத்தில் கூறினார். நீதிபதி தேஜ் சங்கர் என்பவரை உச்சநீதிமன்றம் சார்பில் கண்காணிப்பாளராக நியமித்தது.

ஆனால் அவர் கண் முன்னிலையிலேயே, மாநில அரசின் ஒத்துழைப்புடனேயே, மத்திய அரசுக்குத் தெரிந்தே பாப்ரி மசூதி வெறியூட்டப்பட்ட கரசேவகர்களால் திட்டமிட்டபடி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு கல்யாண் சிங் தலைமையிலான பா.ஜ.க. மாநில அரசும், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசும் பொறுப்பு. இது வரை எந்த குற்றவாளியும் தண்டனை பெறவில்லை. குற்றவாளிகள் ஆட்சியதிகாரத்தில் உள்ளனர். பாப்ரி மசூதி குறித்த சிவில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமோ குரங்கு அப்பம் பங்கு வைத்த கதையாக நிலத்தைக் கூறு போடக்கூறி ‘அற்புதமான’ தீர்ப்பை வழங்கியது. தற்போது மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி சமரசம் என்ற யுக்தி முன்வருகிறது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இதில் இறங்கியுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்படாத ஷியா வக்பு வாரியம் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் , லக்னோவில் மசூதி என்று புதிய தீர்வு பேசப்படுகிறது. அதை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் எதிர்க்கின்றன.

இந்நிலையில் தான் தற்போது தாஜ்மகால் கூட இந்து கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டதாகவும், அதையும் இந்துக்களுக்கு தர வேண்டுமென்ற கருத்தை சங் பரிவாரத்தை சார்ந்த சிலர் பேசத் துவங்கி விட்டனர்.

மத வெறியர்களின் சதிகள் தொடர்கின்றன. வழக்குகள் நீண்டு செல்கின்றன. நீதியோ நிலைநாட்டப்படாமல் உள்ளது. எனவே தான் டிசம்பர் 6 சமயசார்பற்றவர்களுக்கு கறுப்புநாள் ஆகும்.

Leave A Reply

%d bloggers like this: