லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக முழு வெற்றி அடைந்ததாக கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்திகளுக்கு மாறாக, கடந்த எட்டு மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது இருந்த பாஜகவிற்கு ஆதரவான நிலை தேய்ந்து இருப்பதையே இந்த தேர்தலின் முடிவுகள் உண்மையில் காட்டுவதாக இருக்கின்றன.

நகரப் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்தள் போன்ற மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி முதலாவதாக பாஜக வெற்றி பெற்றிருப்பது உண்மைதான். ஆனாலும், 2014இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் 80 பாராளுமன்றத் தொகுதிகளில் 71 தொகுதிகளில் அதாவது 89 சதவீதத் தொகுதிகளில் பாஜக வென்றது, பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை (77%) பாஜக வென்றது, அதற்கு முந்தைய சட்டசபைத் தேர்தலில் பாஜக பெற்ற 15 சதவீத வாக்குகளிலிருந்து 40 சதவீதம் வரை என்ற கணிசமான அளவிற்கு பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருந்தது. இந்த பின்னணியில் பார்த்தால், நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் அடியோடு தகர்ந்து போயிருப்பது தெரிகிறது.

பாஜக பெற்ற மகத்தான வெற்றி என்று அதன் ஆதரவாளர்கள் கூறுவது, உண்மையில் மேயர் தேர்தலில் 16 நகரங்களில் 14இல் பெற்ற வெற்றியையே ஆகும். மாயாவதியின் பிஎஸ்பி வேட்பாளர்கள் மீதமுள்ள அலிகார் மற்றும் மீரட் நகரங்களில் வெற்றி பெற்றனர். இந்த மேயர் தேர்தலில் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓரிரு இடங்களில் இந்த இயந்திரங்கள் தவறாகச் செயல்பட்டதாக அளித்த தகவல்கள் தவிர ஊடகங்களால் வேறு தகவல்களைப் பெற முடியவில்லை. இந்த மேயர் தேர்தல்களுக்கு மட்டும் ஏன் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய 48 அமைச்சர்கள் மற்றும் வலுவான நூற்றுக்கும் மேற்பட்ட மாநில பாஜக நிர்வாகிகளின் துணையோடு மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நேரடியாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தியதென்பது இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பதையே உணர்த்தியது. வாக்களிக்கா விட்டால் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சில இடங்களில் முஸ்லீம்களை அவர்கள் அச்சுறுத்தி மிரட்டவும் செய்தனர்.

நகரப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் பாஜகவின் புதிய காவிக் கோட்டைக்குள்ளாக அதிருப்தி வளர்ந்து வருவதையே காட்டுகின்றன. நகரப் பஞ்சாயத்து உறுப்பினர்களில் 71.31% பேர் சுயேட்சைகளாக இருப்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட 438 தலைவர்களில் 100 பேர் மட்டுமே பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் தெரிய வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்களில் 338 பேர் பாஜக அல்லாதவர்களாக இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் கூட்டணி எதுவுமில்லாமல், ஒவ்வொரு பிரதான எதிர்க்கட்சியும் பாஜகவுக்கு எதிராகத் தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் உள்ள மொத்தம் 5,434 நகரப் பஞ்சாயத்து உறுப்பினர்களில், 4728 இடங்களில் பாஜக தோல்வியடைந்து 662 இடங்களை மட்டுமே பெற முடிந்திருக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் சுயேட்சைகளாகவே இருக்கின்றனர்.  நகராட்சி உறுப்பினர் தேர்தலிலும் மொத்தமுள்ள 5261 இடங்களில் 4303 இடங்களில் பாஜக தோற்றிருக்கிறது. நகராட்சி மன்றத் தலைவர்களுக்கான தேர்தலில் 198 இடங்களில் 127 இடங்களில் பாஜக தோற்றிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர் அமீத் ஷா இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் படுதோல்வி அடைந்திருப்பதாகக் கூறினார். கடந்த இருபது ஆண்டுகளாகவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத நிலையில், ஏதோ இப்போதுதான் காங்கிரஸ் கட்சி தோற்றிருப்பதாக அவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

சோனியா, ராகுல் ஆகியோரின் சொந்தத் தொகுதிகளான ரேபரேலி, அமேதி ஆகிய இடங்களில் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது தனது வாக்கு சதவீதத்தை 10 சதவீதமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது. இது காங்கிரஸுக்கு ஆறுதலான விஷயமாகவே இருக்கும். இது ஒருபுறமிருக்க, தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக பாஜகவினர் உரக்கச் சொல்வது முரண்பாடாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் 39.7 என்றிருந்த அவர்களின் வாக்கு சதவீதம், இப்போது 30.8 சதவீதமாக ஏறத்தாழ ஒன்பது சதவீதம் குறைந்திருப்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஒன்றும் பேசமாட்டார்கள். இந்த எட்டு மாதங்களில் பாஜக இழந்ததை காங்கிரஸ் பெற்றிருக்கிறது என்பதே உண்மை.

https://www.outlookindia.com/website/amp/terrible-misreading-of-uttar-pradesh-local-body-polls-results/305136

-தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

Leave A Reply

%d bloggers like this: