இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக சுயேட்சைகள் தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை மனதில் கொண்டு இப்போது எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றே பாஜக மனக்கோட்டை கட்டியிருந்தது. முதலில் 16 மேயர்கள் தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 1 அன்று வெளிவந்திருந்த வேளையில் ஊடகங்கள் அனைத்தும் காவிக்கட்சியான பாஜக இமாலய வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தன. எட்டு மாதங்களுக்கு முன்பாக 403 சட்டமன்றத் தொகுதிகளில் 325 தொகுதிகளைத் தன்வசப்படுத்தி இருந்த ஒரு கட்சியால் தனித்த பெரும்பான்மை பெற்ற கட்சியாக இப்போது வெல்ல முடியவில்லை என்பதே உண்மை. கட்சியின் வாக்குவங்கியில் 12 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.

தேர்தல் முடிவுகள்: (மொத்த இடங்கள் 652)

நகரப் பஞ்சாயத்து (நகர்ப்புறம்) தலைவர்கள் (438)

சுயேட்சைகள் 182, பாஜக 100, சமாஜ்வாதி 83, பகுஜன் சமாஜ் 45, காங்கிரஸ் 17, ஆம் ஆத்மி 2, ராஷ்ட்ரிய ஜனதா தள் 3, ஏஐஎம்எம் 1. அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் 1, அங்கீகரிக்கப்படாத கட்சி 2

நகராட்சி தலைவர்கள் (198)

பாஜக 70, சமாஜ்வாதி 45, சுயேட்சைகள் 43, பகுஜன் சமாஜ் 29, காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 1, பதிவு செய்யப்பட்ட கட்சி 1

மாநகராட்சி மேயர் (16)

பாஜக 14, பகுஜன் சமாஜ் 2

அனைத்து தேர்தல் முடிவுகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், மொத்தமுள்ள 652 இடங்களில் 225 இடங்களை வென்று சுயேட்சைகள் தனித்த பெரும்பான்மை பெற்றவர்களாக முதலாவது இடத்திலும், 184 இடங்களை வென்று பாஜக இரண்டாவது இடத்திலும், 128 இடங்களை வென்று சமாஜ்வாதி மூன்றாவது இடத்திலும், 76 இடங்களை வென்று பகுஜன் சமாஜ் நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

மேயர் தேர்தலில் இரண்டு இடங்களை வென்ற பகுஜன் சமாஜ் தன்னுடைய தலித்-நகர அடித்தளத்தை பாஜகவிடம் இருந்து மீட்டெடுத்த போதிலும், ஒட்டு மொத்தமாக எதிர்பார்த்த அளவிற்கு அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

வாக்குப்பதிவு குறித்து ஆராய்ந்தால், உத்தரப்பிரதேச மக்கள்தொகையான 22 கோடியில், எட்டு கோடிப் பேர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களாக இருந்தனர்.  52.4 சதவீத வாக்குகள் பதிவானது என்பதால், சற்றே நான்கு கோடிக்கு அதிகமானோர் வாக்களித்திருக்கின்றனர். 438 நகரப் பஞ்சாயத்துகளில் 2.65 கோடிப் பேரும், 16 மாநகராட்சிகளில் 35 லட்சம் பேரும், 198 நகராட்சிகளில் ஒரு கோடிப் பேரும் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார்கள்.

இதில் மேயர் தேர்தலில் பாஜக 87 சதவீத வாக்குகளையும் (30 லட்சம் வாக்குகள்), பகுஜன் சமாஜ் 12.5 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. நகராட்சிகளில் 70 இடங்களை வென்ற பாஜக 35.5 சதவீத வாக்குகளையும், சமாஜ்வாதி 22.5, பகுஜன் சமாஜ் 14.65, காங்கிரஸ் 4.5 சதவீத வாக்குகளையும் பெற்றன.  சுயேட்சைகள் 21.72 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். நகரப் பஞ்சாயத்துகளில் உள்ள 438 இடங்களில் 100 இடங்களை வென்ற பாஜகவால் 22 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஒட்டு மொத்தமாக இந்த மூன்றடுக்கு உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள  நான்கு கோடி வாக்குகளில் 1.23 கோடி வாக்குகளை, ஏறத்தாழ முப்பது சதவீத வாக்குகளைப் பாஜக பெற்றிருக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜக 42 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.  இப்போது அதனுடைய வாக்குவங்கி சரிந்து முப்பது சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. இப்போது தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டால், பாராளுமன்றத்திற்கு 30 முதல் 34 இடங்களையும், சட்டமன்றத்திற்கு 158 முதல் 162 இடங்களையும் மட்டுமே பாஜகவால் வெல்ல முடியும்.

இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தத் தேர்தலில் பெரும்பாலும் வாக்குச் சீட்டுகளே பயன்படுத்தப்பட்டதால்ம் பாஜகவால் நகராட்சி, நகரப் பஞ்சாயத்து தேர்தல்களில் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. நகரப் பஞ்சாயத்துகளில் பஸ்தி, கோண்டா, சித்ரகுட், அலகாபாத், மீர்ஜாப்பூர், பாரபங்கி, அஜம்கார், ஜான்பூர், கௌசாம்பி, பத்தேப்பூர், பரூக்காபாத் என்று பல இடங்களில் முழுமையாக பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது. அமேதியில் வெற்றி பெற்றிருப்பது பெரிய விஷயமல்ல. ஏனெனில் ஏற்கனவே அமேதி உள்ளாட்சி பாஜக வசம்தான் இருந்தது. நடந்து முடிந்திருக்கும் இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகிக்கு பலத்த அடி கிடைத்திருக்கிறது. தனது ஆதரவை அவர் இழந்திருக்கிறார். உத்தரப்பிரதேச அரசியலில் புதுமுகங்களுக்கான கதவு திறக்கப்பட்டிருக்கிறது.

http://www.jantakareporter.com/india/civic-body-results-show-bjp-will-fail-get-majority-uttar-pradesh-assembly-elections-held-today/162665/

-தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

Leave A Reply

%d bloggers like this: