சிவகங்கை, டிச.3-
சிவகங்கை அருகே உள்ள வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கொட்டுமுரசு கோட்டைச்சாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்ற சிவகங்கை மாவட்டக்குழு அலுவலகத் திறப்பு விழாவில் கோட்டைச்சாமியின் கலைநிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவரைப் பாராட்டி வாழ்த்தினார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சேதுநாச்சி யாருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு பையனும், இரண்டாவது மனைவி மாரியம் மாளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நாட்டுப்புற இசைக் கலைஞர் கோட்டைச்சாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிவகங்கை மாவட்டம், வேலங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி இளம் வயது முதலே சிறந்த பாடகராக மிளிர்ந்தார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களால் முற்போக்கு இயக்க மேடைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவரது இசைப்பயணம் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

எளிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளையும், செங்கொடி இயக்கத்தின் பெருமைகளையும் தனது கம்பீரமான குரலால் தமிழகம் முழுவதும் ஒலிக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு. அவர் பாடிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கின. அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவுச் செய்தியறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, தமுஎகச மதுரை புறநகர் மாவட்டக்குழு பொறுப்பாளர்கள், சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள், செம்மலர் கலைக்குழுவினர், நாட்டுபுறவியல் கலைக்குழுவினர் உள்ளிட்ட பலர் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: