திருப்பூர், டிச.3-
திருப்பூர் அவிநாசி அருகே ஞாயிறன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் அடியில் உள்ள பள்ளத்தில் அரசு நகர பேருந்து நேற்று கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்றரை வயது குழந்தை உள்பட 45 பேர் படுகாயமடைந்தனர்.

அவிநாசியிலிருந்து கருமத்தம்பட்டி வழியாக அன்னூருக்கு செல்வதற்காக அரசு நகர பேருந்து நெ. ஏ11 ஞாயிறன்று மதியம்ஒரு மணியளவில் அவிநாசி புதிய பேருந்துநிலையத்திலிருந்து புறப்பட்டது. பேருந்து அவிநாசியை அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீமயிலம்மன் கோவில் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென முதியவர் சாலையின் குறுக்கே வர, அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பொன்னுசாமி பேருந்தை இடப்புறமாக திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் அடியில் உள்ள 30 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று கவிழ்ந்தது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் கூச்சலிட்டு அலறினர்.

இந்த விபத்தில் கருமத்தம்பட்டி வடுகபாளையத்தைச்சேர்ந்த கனகராஜ்(55) மற்றும் தெக்கலூர் பந்தம்பாளையம் சுண்டப்பன்(70) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் இவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் மூன்றரை வயது குழந்தை உள்பட 45 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.