இந்தியாவின் முதல் 50 உயர்கல்வி நிறுவனங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் மாணவர்களின் சேர்க்கை ஒட்டு மொத்தமாக வெறும் 16% மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருக்கிறது. மீதமுள்ள 84 சதவிகித இடங்கள் காலியாகவே இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் தேசிய மையம் சமீபத்தில் இந்தியாவின் முதல் 50 உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஜேஎன்யு, தில்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், கோவா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த ஆகஸ்ட் 2017 – நவம்பர் 2017 காலங்களில் மாற்றுத் திறனாளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில், இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையான 3.33 லட்சத்தில் வெறும் 0.48% அதாவது ஆயிரத்து 614 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கையில் 71.8% மாணவர்கள், 28.19% மாணவிகள் ஆவர். மேலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் 1,614 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 613 பேர் எலும்பியல் குறைபாட்டாலும், 311 பேர் பார்வை குறைபாட்டாலும், 31 பேர் பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஊனமுற்றவர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் தேசிய மையம் கவுரவ இயக்குநர் ஜாவத் அபிதி கூறுகையில், மாற்று திறனாளிகள் இந்த பல்கலைக்கழகங்களில் பயில இயலாத போது சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. நாட்டின் முதல் 50 உயர் கல்வி நிறுவனங்களிலே இந்த நிலை என்றால் மற்ற கல்வி நிறுவனங்களில் நிலை எவ்வாறு இருக்கும். ஊனமுற்ற பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என நாங்கள் பல காலமாக கூறி வருகிறோம். இந்த விகிதங்களை பார்க்கும் போது மாற்றுத் திறனாளி மாணவிகளின் நன்மைக்காக மனிதவள அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என கேட்க தோன்றுகிறது. இயலாமை சட்டம்,1995 (1995 Disability Act) இயற்றப்பட்டு 20 ஆண்டு காலம் ஆன போதும் கல்வி அதே நிலையில் தான் உள்ளது. தற்போது அது முன்பிருந்ததை விட மிக மோசமாக உள்ளது என்றார்.

கடந்த ஏப்ரல் 2015 ஆண்டு 0.56%-மாக இருந்த மாற்று திறனாளி மாணவர்களின் சேர்க்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. மாற்று திறனாளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாக 3% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இயலாமை சட்டம்,1995 (1995 Disability Act) இயற்றப்பட்டு 20 ஆண்டு காலம் ஆன போதிலும் 0.5% குறைந்துள்ளது. இயலாமை சட்டம் தோல்வியடைந்து விட்டது என இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: