கோவை,
கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ‘கட்அவுட்’, பேனர்கள், அலங்கார வளைவுகள் வைத்துள்ளனர். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டு அருகே வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற ரங்கசாமி கவுண்டன் புதூரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரகு மோதி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவர் மீது ஏறியதில் ரகு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோவை சிங்கநல்லுர் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக், உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள புகைப்பட ஆதாரங்களை பார்க்கும் போது, நெறிமுறை இல்லாமல் பல இடங்களில் பேனர்கள், கட்அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதனால் தான் என்ஜினீயர் ரகு விபத்தில் சிக்கி இறந்து இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எனவே, கோவையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் உடனே அகற்ற வேண்டும். அனுமதி பெற்ற பேனர்களாக இருந்தாலும், அவை விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இருந்தால், அவற்றையும் அகற்ற வேண்டும். விபத்தில் பலியான ரகுவின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

 

Leave A Reply

%d bloggers like this: