அரியலூர்;
ப்ளூ வேல் விளையாட்டால் பெற்ற தாயை மகன் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம். இவர் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை. இவருடைய மகன் செந்தில். இவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.கடந்த சில நாட்களாகவே செந்திலின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்துள்ளன. தனிமையாகவே காணப்பட்டார். அதிக கோபத்துடன் இருந்தார். நாட்கள் செல்லச் செல்லத் தன்னுடைய தாய் என்றுகூடப் பாராமல் ஜெயத்தை அடித்துத் துன்புறுத்தும் நிலைக்குச் சென்றார்.

இவருடைய கொடுமையைத் தாங்க முடியாத ஜெயம் காவல் நிலையத்தில் மகனின் செயல் குறித்துப் புகார் கொடுத்தார். இதையடுத்து செந்திலிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அவர் கடந்த சில தினங்களாக ப்ளூ வேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருவதாகவும் கூறினார்.“என்னுடைய தாயை அடிக்கச் சொல்லி கட்டளை வந்தது. எனவேதான் அடித்தேன்” என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு கலந்தாலோசனை கொடுக்க முடிவு செய்தனர்.
இளைஞர்கள் ப்ளூ வேல் விளையாட்டின் பொறியில் சிக்கிக்கொள்வது இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்த அபாயகரமான விளையாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

ப்ளூ வேல் விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால், இந்த விளையாட்டை இணையத்தில் இருந்து நீக்குவது இயலாத காரியம் என்று உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 20 ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.