எல்.என்.ரேவதி
ஜவுளி உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஒட்டப்பட்டிருக்கும் நோட்டீஸ்கள் பல திருப்பூர் முழுவதும் முன்பெல்லாம் காணக் கிடைக்கும். ஆனால், இப்போது அவற்றைக் காண முடிவதில்லை என்பதிலிருந்து ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு மங்கிவிட்டதை உணர முடிகிறது. ஆனால், ஜவுளித் துறையைச் சேர்ந்த சிலர் அங்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறனர். எனில், அந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப் பலகைகளும் நோட்டீஸ்களும் எங்கே சென்றன?ஜவுளி உற்பத்தி ஆலைகள் சுமார் 8,500க்கும் மேல் திருப்பூர் நகரத்தில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல குடும்பங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மற்றும் பல நடுத்தர நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் சரியான பதிவின்றி இயங்குவதால் இவை மூடப்படும் தருவாயில் இருப்பதாக இத்துறையினர் கூறுகின்றனர்.

“இந்த நிறுவனங்கள் தொழிற்துறை உரிமம் பெற்று இயங்கவில்லை.பதிவு செய்யப்படுவதற்கான தகுதியும் இந்த நிறுவனங்களுக்கு இல்லை. புதிய ஜி.எஸ்.டி. வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த நிறுவனங்கள் முறைசாராத் துறையைச் சேர்ந்தவையாகவே உள்ளன” என்கிறார் ஜவுளி ஏற்றுமதியாளர் ஒருவர்.சுயமாகத் தொழில் தொடங்கி ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சிலர் வேறு வழியின்றி வயிற்றுப் பிழைப்புக்காகச் சம்பளத்துக்கு வேலைபார்க்கச் செல்கின்றனர். ஒரு சிலர் மீண்டும் இயல்பு நிலை திரும்பிவிடும் என்று காத்துக்கிடக்கின்றனர். புதிதாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிதான் இவர்களின் காத்திருப்புக்குக் காரணமாகியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தால் அக்டோபர் மாதத்தில் திருப்பூர் மண்டல ஜவுளி ஏற்றுமதியிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு சரியான விலை நிலவரத்தை அடைய முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஏற்றுமதியாளர்களின் தொழில் முடங்கும் நிலை உள்ளது” என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான ராஜா எம்.சண்முகம்.
அவர் மேலும் கூறுகையில், “ஒட்டுமொத்த ஜவுளித் துறையே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் சர்வதேசச் சந்தையில் போட்டியிட்டு நிலைத்திருக்கும் அளவுக்கு நம்மிடம் போதிய சக்தி இல்லை. ஏனெனில் அந்நாடுகள் குறைந்த கட்டண விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. இதுபோன்றதொரு நிலையில் தற்போது அரசு விதித்துள்ள வரி விகிதங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது” என்று வருந்துகிறார்.ஏற்றுமதியில் இந்தப் புதிய வரிச் சட்டம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் முதலே ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் இன்னும் மோசமாக 41 சதவிகித பின்தங்கிய சரிவை இந்தியா சந்தித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி வாயிலாகக் கிடைத்த விற்று முதல் ரூ.5,398 கோடி மட்டுமே. ஆனால், 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்த மதிப்பு ரூ.9,110.75 கோடியாக இருந்தது. இதனால் ஏற்றுமதியாளர்களிடையே இத்துறையில் தொடர்ந்து நீடித்திருக்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதுபோன்ற சூழ்நிலையில் அரசானது ஏற்றுமதியாளர்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தினால் நிலைமை சீராகிவிடும் என்ற நம்பிக்கையில் இவர்கள் இருக்கின்றனர்.

ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு ஜவுளி உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. “2011-12ஆம் ஆண்டில் திருப்பூரில் மாசுபாடு சார்ந்த பிரச்னை ஒன்று எழுந்தபோது ஆயத்த ஆடைகள் ரூ.10,500 கோடிக்கு ஏற்றுமதியாயின. மேலும், உள்நாட்டில் ரூ.3,500 கோடி விற்று முதல் கிடைத்தது. கடந்த ஐந்தாண்டுகளில் (2012-17) உள்நாட்டு ஜவுளிச் சந்தை ஐந்து மடங்கு வளர்ச்சியுடன் ரூ.18,000 கோடி மதிப்பை எட்டியது.

ஆனால் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வெறும் இரண்டு சதவிகித உயர்வுடன் ரூ.10,500 கோடியிலிருந்து ரூ.26,000 கோடியாக மட்டுமே உயர்ந்தது” என்று ராஜா எம்.சண்முகம் விவரிக்கிறார்.திருப்பூர் நகரின் காதர்பேட்டையில் சுமார் 2,500 ஜவுளிக் கடைகள் உள்ளன. இவை உள்நாட்டு ஜவுளித் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்கு வகுக்கின்றன. இச்சந்தை இப்போது களையிழந்து கிடக்கிறது. இச்சந்தையில் வழக்கமாக வந்து ஜவுளிகளை வாங்கிச் செல்லும் வணிகர்களில் 50 சதவிகிதத்தினர் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு வரவேயில்லை.அல் மாலிக் கார்மெண்ட்ஸ் என்ற ஜவுளிக் கடையானது சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட முதல் இரண்டு மாதங்கள் திறக்கப்படாமல் மூடியே இருந்ததாக அதன் உரிமையாளரான சாதிக் பாஷா புலம்புகிறார். “இப்போது ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தீபாவளி விற்பனை எங்களை ஏமாற்றிவிட்டது. சென்ற வருடம் பணமதிப்பழிப்பு; இந்த வருடம் சரக்கு மற்றும் சேவை வரி” என்று நொந்துகொண்டார் சாதிக் பாஷா.

திருப்பூர் நகரின் பெரும்பாலான ஜவுளிக் கடைகள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டன. முன்பெல்லாம் (ஏப்ரல் – மே) வாரத்துக்கு ரூ.1 லட்சம் வரையில் விற்பனை இருந்த நிலையில் தற்போது ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில் மட்டுமே கிடைக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு இடம்பெயர்ந்து வந்த பணியாட்கள் பலர் இங்கு ஜவுளித் தொழில் முடங்கியுள்ளதால் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பி வைத்த பெருமை சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தையே சேரும்!
நன்றி: தி இந்து பிசினஸ் லைன்
தமிழில்: செந்தில்குமரன்

Leave a Reply

You must be logged in to post a comment.