கரூர்;
மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாநில அதிமுக அரசு செயல்படுகிறது. அதனால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராசன் குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 8 ஆவது மாநாடு தோகைமலையில் நவ.26, 27 தேதிகளில் நடைபெற்றது.தோகைமலை கருப்பகோவில் தெருவில் தொடங்கிய பேரணி கடைவீதி வழியாக சென்று பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல் தலைமை வகித்தார்.

மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராசன் சிறப்புரையாற்றி பேசியதாவது –
ஜிஎஸ்டி வரியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை மத்திய அரசு சீரழித்து வருகிறது. ஆனால் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில்களுக்கு வரிச் சலுகையை அறிவிக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.

மேலும் விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியங்கள் தேவையற்றது என மத்திய அமைச்சர்கள் அறிவிக்கின்றனர். அதனால் விவசாய இடு பொருட்களான உரம், பூச்சி மருந்துகளின் விலை உயர்வு ஏற்படுகிறது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிப்பதில்லை. அதற்கு மாறாக சந்தைகள் தீர்மானம் செய்யும் என்று கூறுகின்றனர்.

இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். சுவாமிநாதன் அறிக்கையை நிறைவேற்ற மோடி அரசு முன் வர வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தொழில் அதிபர்களிடம் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றி பேசும் மோடி, ஏழை, எளிய மக்கள் பற்றி பேசுவதில்லை. எனவே இதை மாற்ற பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மக்களை கவனிக்கவில்லை, கவலையும் இல்லை. தற்போது நடக்கும் வருமான வரி சோதனை ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டவர்கள் மீது நடத்தினால் எவ்வளவு கோடிகள் கிடைக்கும் என்று தெரியவில்லை.

மக்கள் பிரச்சனையின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் உரிய நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். மக்களுக்கு எங்கு அநீதிகள் நடந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் குரலினை கொடுக்கும். தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும் என்றார்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.துரைராஜ், மூத்த தலைவர்கள் ஜி.ரத்தினவேலு, து.ரா.பெரியதம்பி, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், பி.இலக்குவன், எம்.ஜோதிபாசு, எஸ்.சண்முகசுந்தரம், பி.ராஜீ ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.