ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் மூன்று இளம் தலைவர்களில் முக்கியமானவர். குஜராத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் முகமாக அறியப்படுபவர்.

ஊனா தாலுகாவில் மாட்டுத் தோலை உரித்த தலித் குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இவர் நடத்திய பேரணியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். தேர்தலுக்கான தனது தீவிர சுற்றுப்பயணத்துக்கு இடையே ‘தி இந்து’-வுக்காக அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது.

ஊனா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்ததா?

அன்றைய குஜராத் முதல்வர் ஆனந்தி பென் இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் நீதி கிடைக்கச் செய்வேன் என்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுக் குடியிருப்பு, விவசாய நிலம், நிதி உதவி, அரசுப் பணி அளிக்கப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. பிரதமர் மோடியும் இதுகுறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. குற்றவாளிகள் அனைவரும் பெயிலில் வெளியே வந்துவிட்டார்கள். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதுதான் இங்கும் நடந்திருக்கிறது.

பசு குண்டர்கள் முன்பைவிட தீவிரமாகச் செயல்படுகிறார்கள். அம்ரிலி, காந்திநகர், ஆனந்த் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பசுவை காரணம் காட்டி தலித் மக்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. இந்தியா முழுவதுமே கடந்த 3 ஆண்டுகளில் 28 இஸ்லாமியர் கள் பசு குண்டர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குஜராத்தில் மோடி அலை வீசுகிறதா?

மோடி அலையும் இல்லை. அமித்ஷா அலையும் இல்லை. ஒரே ஒரு அலை வீசுகிறது. அது பாஜக-வுக்கு எதிரான அதிருப்தி அலை. அதேசமயம் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் எந்த அலையும் வீசவில்லை. குஜராத் மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். ராம் பெயரிலும் இந்துத்துவா பெயரிலும் நீண்ட காலம் குஜராத் மக்களை மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரித்து வைத்திருக்க முடியாது.

அதிருப்தி அலைக்கு என்ன காரணம்?

படேல்கள், தலித்துக்கள், முஸ்லிம்கள், விவசாயிகள், வணிகர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அத்தனைப் பேருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கத்தின்போது வடதோராவில் பாஜக-வின் கவுன்சிலரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள். சமீபத்தில் வடதோராவில் நடந்த மோடியின் ஊர்வலத்தில் பெண்கள் வளையலை கழற்றி வீசி எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். ஜி.எஸ்.டி-யால் சூரத் ஜவுளி வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை இங்கே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரில் மோடி கொடுத்த எந்த வாக்குறுதியும் நடைமுறைக்கு வரவில்லை.

மோடியின் சொந்த மண்ணில் நடக்கும் தேர்தலில் பாஜக-வின் முன்னேற்பாடுகள் எப்படி இருக்கின்றன?

இந்த முறை தமிழக பாணியில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவது அவர்களின் இப்போதைய இலக்கு. இது தேர்தல் நெருங்கும்போது அதிகரிக்கலாம். இந்த வகையில் தொகுதி ஒவ்வொன்றுக்கும் ரூ.20 கோடி செலவு செய்யத் திட்டமிட்டிருகிறார்கள். அரசு இயந்திரம், பணம், காவல் துறை அத்தனையும் அவர்கள் கையிலிருக்கிறது. இவை எதுவும் எடுபடாமல் போனால் கடைசிபட்சமாக மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள். குஜராத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு இது ஒரு கவுரவப் பிரச்சினை. இந்த தேர்தலின் முடிவுகள் அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.

காங்கிரஸின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

காங்கிரஸ் கட்சி உணர்வுபூர்வமாக மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்கத் தவறிவிட்டது. தேர்தல் பாணி அரசியலை மட்டுமே அது செய்கிறது. அவர்கள் பாஜக-வின் எதிர்ப்பு அரசியலைத் தவிர பெரியதாக எதையும் செய்யவில்லை.

பாஜக-வுக்கு எதிராக உருவான தலைவர்களில் ஹர்திக் படேல் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார், அல்பேஷ் காங்கிரஸுடன் தான் இருக்கிறார். உங்கள் நிலைப்பாடு என்ன?

இவர்களுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று நான் சொல்லப்போவதில்லை. ஒரே நோக்கம் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். செய்த தவறுகளுக்காக நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

  • நன்றி தமிழ் இந்து

Leave a Reply

You must be logged in to post a comment.