பாபர்மசூதி இடிக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு நினைவு நாளை கறுப்புத் தினமாக கடைபிடிக்குமாறு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.இதை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) லிபரேசன், ஆர்எஸ்பி, அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்யூசிஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கூட்டாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாபர் மசூதியைத் திட்டமிட்டு இடித்த 1992 டிசம்பர் 6, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கருப்பு ஞாயிறு ஆகிவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருக்க, உ.பி. மாநில ஆட்சியிலிருந்த பாஜக ஒத்துழைக்க, சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்த இந்த பாதகச் செயல், நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளின் மீது நடத்தப்பட்ட மிகமோசமான தாக்குதலாகும். ஆர்எஸ்எஸ்சின் கொள்கை இலக்கான பாசிச, சகிப்புத்தன்மை யசிறிதுமற்ற, ஒரு சர்வாதிகார இந்து ராஷ்டிரத்தை நிறுவவும், இந்தியக் குடியரசின் அடிப்படைகளை அழிக்கவும் தீர்மானித்துள்ள வெறிபிடித்த சக்திகளின் வளர்ச்சியை இது வெளிப்படுத்தியது.ஆர்எஸ்எஸ்ஸால் உருவாக்கப்பட்ட தனியார் படைகள், பாஜக தலைவர்களின் தலைமையில் அன்று பாபர் மசூதியை இடித்தன.

இன்று, அதே படைகள், பாஜக ஆட்சியிலிருக்கும் துணிவில், அதன் ஆதரவுடன், தங்களுக்குச் சட்டப்படி அதிகாரம் கிடைத்துவிட்டதாகக் கருதி செயல்படுகிறார்கள். தலித்துக்கள்மீதும், இஸ்லாமியர்கள்மீதும் பசுவதை என்ற குற்றச்சாட்டை சித்தரித்து, இன்று பசுப்பாதுகாவலர்கள் கடும் வன்செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இளைஞர்கள் என்ன உடை அணியவேண்டும், என்ன உணவை உண்ண வேண்டும், யாருடன் நட்புக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இன்று அந்த கலாச்சாரக் காவலர்கள் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். மத்திய அரசிலும், பல்வேறு மாநில அரசுகளிலும் அமைச்சர்களாக உள்ளவர்கள் உட்பட, மூத்த பாஜக தலைவர்கள், இத்தகைய படைகளைக் கட்டுப்படுத்தி இந்திய நாட்டின் சட்டத்தைக் காப்பதற்கு பதிலாக, அவர்களின் சட்டவிரோத செயல்களை நியாயப்படுத்தி, வெளிப்படையாக ஆதரிப்பதுடன், அவற்றைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.

இந்திய நாட்டின் சட்டங்களை வெளிப்படையாக மீறி பாபர் மசூதியை இடித்ததன்மூலம், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளைச் சரிசெய்ய முடியாத அளவு சேதப்படுத்தியவர்கள்மீது, கால்நூற்றாண்டு கடந்தபின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிலுள்ள ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் இந்த அநீதியை என்றும் மறக்கமாட்டார்கள் என்பதுடன், குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்தும்வரை போராடுவார்கள்.டிசம்பர் 6, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவரும், அரசியல் சட்டத்தை உருவாக்கியவருமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளும் ஆகும். நமது அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக கூறுகளின்மீது மதவாத சக்திகளால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், நாடுமுழுவதும் தலித்துக்கள்மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு இயக்கமாக இந்த நாளை இடதுசாரிகள் கடைப்பிடிப்பார்கள்.

மக்களிடையே பிளவுகளைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து, பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவின் கலாச்சாரத்தையும், மதச்சார்பற்ற ஜனநாயகக் கோட்பாடுகளையும் காப்பதற்கான போராட்டத்திற்கு அனைத்து மக்களையும் திரட்டி இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும்.மத்திய அரசாலும், பாஜக தலைமையிலான மாநில அரசுகளாலும் மதவாத சக்திகள் ஊக்கப்படுத்தப்படுவதை எதிர்க்கவும், இதற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், டிசம்பர் 6ஐ கருப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு, இடதுசாரிக் கட்சிகள் நாடுமுழுவதுமுள்ள தங்கள் அணிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளன. அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப எதிர்ப்பியக்கங்களைத் திட்டமிட்டு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: