===க.சுவாமிநாதன்===                                                                                                  யோசிக்கிறார்களாம்…
இந்திய ஜவுளி இறக்குமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது அக்டோபர் 2017 வரையிலான ரூ.5,391 கோடி ஏற்றுமதி என்பது 39 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த சில மாதங்கள் கொஞ்சம் பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதம் அதிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது, ஜிஎஸ்டி அமலாக்கத்தின் தாக்கமே இச்சரிவுக்கு காரணம். இப்போது ஊக்குவிப்புத் தொகையை அதிகரிப்பது பற்றி யோசிக்கிறார்களாம்.

திண்டாடுகிறார்களாம்
பணமதிப்பு நீக்கம் ஓராண்டைக் கொண்டாடிய பிறகும் கிராமப்புற மக்கள் பணத்திற்கு அல்லாட வேண்டியுள்ளதாம். செப்டம்பர் 2016ல் கிராமப்புற ஏடிஎம்கள் 41,633 இருந்தது. செப்டம்பர் 2017ல் இது 40,489 ஆகச் சரிந்துள்ளது. ஓராண்டில் 1,144 ஏடிஎம்கள் மூடப்பட்டுவிட்டன, அரசு வங்கிகளின் ஏடிஎம்களில் 20 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளது. தனியார் வங்கிகளோ 8 சதவீதம் ஏடிஎம்களையே கிராமங்களில் வைத்துள்ளது.

கதறுகிறதாம்…
டிஜிட்டல் யுகம் “காகிதமற்ற உலகத்தைக்” கொண்டு வருமென்ற வாய்ப்பந்தல்கள் சரிந்து கிடக்கின்றன. “காகிதமில்லாத வாழ்க்கை கனவுதான்” என்று சேசசாயி பேப்பர் ஆலை மேனேஜிங் டைரக்டர் காசி விஸ்வநாதன் அடித்துச் சொல்லுகிறார். காரணம் அவரது தொழில் ஆண்டிற்கு 6 சதவீதம், 7 சதவீதம் அமோகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மொத்தம் அத்தொழிலின் வணிகம் ரூ.50,000 கோடிகள் ஆகும். ஆனாலும் கன்னத்தில் குழி விழ காசி விஸ்வநாதன் சிரிக்கவில்லை. காரணம் இறக்குமதி 30சதவீதம் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு உற்பத்தி பெரும் சவாலைச் சந்திக்கிறதாம். அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏ4 ஷீட் பேப்பர் இறக்குமதியில் வந்து குவிவதால் தொழிலுக்கு அபாயம் எழுந்துள்ளதாக கதறுகிறது காகிதம்.

‘தேசத்தினும் பெரிதாம்!’
உலகளாவிய ஒருங்கிணைப்பு கொண்ட முக்கியமான வங்கிகளின் பட்டியலை ‘தி பைனான்சியர் ஸ்டெபிலிட்டி போர்டு’ 2017ல் வெளியிட்டுள்ளது. இதில் 30 வங்கிகள் உள்ளன. இந்தியாவில் மூன்று வங்கிகள்(ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி) மட்டுமே உள்ளன. மேலைநாடுகள் சிலவற்றில் இவ்வங்கிகளின் சொத்துக்கள் அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம் – ஏன் இரண்டரை மடங்குகள் கூட – உள்ளனவாம்.சுவிட்சர்லாந்தின் இரண்டு வங்கிகளின் சொத்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 264 சதவீதம் ஆகும். பிரான்சின் 3 வங்கிகள் (242 சதவீதம்), பிரிட்டனின் 4 வங்கிகள் (215 சதவீதம்) ஸ்வீடனின் 1 வங்கி (144 சதவீதம்), ஸ்பெயினின் 1 வங்கி(134 சதவீதம்) நெதர்லாந்தின் 1 வங்கி (128 சதவீதம்) ஜப்பானின் 3 வங்கிகள் (128 சதவீதம்) சீனாவின் 4 வங்கிகள் (115 சதவீதம்) என்ற அளவில் உள்ளன.

இடமில்லையாம்
தலித் சக்தி கேந்திரா என்கிற அமைப்பு 10 மாநிலங்களைச் சேர்ந்த தலித்துகளைக் கொண்டு கதர் துணியில் 125 அடி அகலமும், 84 அடி உயரமும் கொண்ட தேசியக் கொடியைத் தயாரித்து உள்ளனர். 100 ஆசிரியர்கள், மாணவர்கள் 25 நாட்கள் இதற்காக உழைத்துள்ளனர்.டாக்டர் அம்பேத்கரின் 125 ஆண்டு பிறந்த தின நிறைவைக் குறிக்கும் வகையில் 125ஆவது அடி அகலத்தோடு தயாரித்துள்ளனர். இதை குஜராத் பாஜக முதல்வரிடம் அளிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் இக்கொடியை வைப்பதற்கு இடமில்லை; இடம் கிடைத்த பின்னர் தகவல் சொல்லுகிறோம் என காந்தி நகர் மாவட்ட ஆட்சியரகம் மறுத்துவிட்டதாம். இடம் எங்கு இல்லை இதயத்திலா? என்ற குமுறல் எழுந்துள்ளது.

திருடு போய்விட்டதாம்
“ஊபர்” கால் டாக்சி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய ஒப்புதலைத் தந்துள்ளது. அதன் வசம் நம்பி வாடிக்கையாளர்களால் தரப்பட்ட 5 கோடியே 70 லட்சம் பேரின் பெயர்கள், இமெயில் முகவரிகள், முகவரிகள், அலைபேசி எண்கள் திருடு போய்விட்டதாம். 6 லட்சம் டிரைவர்களின் லைசன்ஸ் நம்பர்களும் களவாடப்பட்டுவிட்டதாம்.இதை வெளியில் சொல்லாமல் இருந்த “யூபர்” நிறுவனம் தற்போது அமெரிக்க கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டது. இதில் என்ன முக்கியமான விசயம் எனில், ஆன்லைன் திருடர்களுக்கு 65 லட்சம் ரூபாய் கொடுத்து கமுக்கமாக பிரச்சனையை முடிக்க முயற்சித்துள்ளது. எல்லாம் சரி! யார் திருடர்கள்? யாருக்கு பணம் கொடுத்தீர்கள்? என்றால் அது ரகசியமாம். வாடிக்கையாளர்களின் ரகசியம் பாதுகாக்கப்படாதாம். திருடர்களின் ரகசியம் புனிதமானதாம்.

சந்தையே கடவுளாம்
“மேக்  இன் இந்தியா” ஆரவாரங்கள் இங்கு காதுகளில் விழுந்து கொண்டிருக்கும் போதே மகேந்திரா குழுமம் அமெரிக்காவில் வாகன உற்பத்தியை சத்தமில்லாமல் துவங்கியுள்ளது. அதன் சேர்மன் ஆனந்த் மகேந்திராவுக்கு அமெரிக்கா, இந்தியா… என்றெல்லாம் செண்டிமென்ட்டுகள் இல்லை. ‘எங்களின் தொழில் வியூகம் எங்கு போகச் சொல்லிப் பணிக்கிறதோ அங்கு போவோம்.அமெரிக்காவுக்கு என்று சொன்னால் அங்கே செல்வோம். இப்போது டிராக்டர்களுக்காக வந்துள்ளோம். ஏனெனில் உலகத்தின் பெரிய டிராக்டர் சந்தை இங்கு உள்ளது எல்லோருக்கும் தெரியும். அமெரிக்காவில் நீங்கள் தொழில்செய்துவிட்டால் உலகில் எங்கே வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிறார் அவர். (இந்து பிசினஸ் லைன்) ‘மேக் இன் அமெரிக்கா என்று அவரை அவரது தொழில் வியூகம் சொல்லச் சொல்கிறது. சொல்கிறார். லாப செண்டிமெண்ட்டுதான் மூலதனத்துக்கு உண்டு. தேச செண்டிமெண்ட்டுகள் கிடையாது.

Leave A Reply

%d bloggers like this: